இலக்கியம்

எதிர்வினை | தமிழில் எடிட்டர்கள் இருக்கிறார்கள்; ஆனால், இன்னும் நிறையப் பேர் வேண்டும்!

செய்திப்பிரிவு

நம்மூரில் பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றனவோ அப்படித்தான் வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான பதிப்பகங்கள் பதிப்பாசிரியர் குழு (Publishing board) அமைத்து அதன் மூலமாகவே தரமான, நூல்களை வெளியிட்டுவருகின்றன. ஆனால், தமிழில் எங்கள் 'வர்த்தமானன் பதிப்பகம்' உள்ளிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே பதிப்பாசிரியர் (Publishing editor) என்ற பொறுப்புமிக்க பணியிடத்தை உருவாக்கிச் செயல்பட்டுவருகின்றன.

தமிழ் பதிப்புலகில் பெருமளவில் பதிப்பாளர்களே இன்று பதிப்பாசிரியர்களாகச் செயல்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே!

பதிப்பாசிரியர் என்று ஒருவரை நியமித்து அவரது பெயரையும் போடுவதில் என்ன சிக்கல்? செலவை மிச்சம் பிடிக்கும் சூட்சமமே பதிப்பாளரே பதிப்பாசிரியராக மாறக் காரணம் என்று நான் நினைக்கிறேன்!

ஒரு பதிப்பாசிரியர் என்பவர் அறிவு, ஆற்றல், தகுதி, திறமை மிக்கவராக; எதையும் விரைவில் உள்வாங்கிக் கொள்பவராக; நேரம், காலம் கருதாமல் உழைப்பவராக; பிரதியைப் பார்ப்பதில் வல்லவராக இருந்தால் சிறந்த புத்தகத்துக்கு அதுவே உத்தரவாதம். பதிப்பாசிரியர் பணி பொறுப்புமிக்கப் பணி. எழுத்தாளரையும் பதிப்பாளரையும் இருபுறமும் கைகோத்துச் செல்ல வேண்டிய கடமையும் பதிப்பாசிரியருக்கு உண்டு.

ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பதிப்பாளர் மூலமாகப் பதிப்பாசிரியரின் கைகளில்தான் முதலில் தரப்பட வேண்டும். அவரே முதல் வாசகர். புத்தகத்துக்கு இறுதி வடிவம் தருபவரும் அவரே.

தமிழில் நன்கு தேர்ந்த, மொழியறிவு மிக்கப் பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்துத் தக்க பயிற்சியளித்து மதிப்புமிக்க தொகையையும் அளித்தால் பல திறமைமிக்க பதிப்பாசிரியர்கள் உருவாக வாய்ப்புண்டு. 'பபாசி'யின் செயலாளர் புகழேந்தி 'தி இந்து'வுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறபடி, பதிப்பாசிரியரை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையை 'பபாசி' நடத்தினால், அது தமிழ்ப் பதிப்புலகுக்கு மிக நல்ல எதிர்காலத்தைத் தரும்!

- வர்த்தமானன்,பதிப்பாளர், வர்த்தமானன் பதிப்பகம்.

SCROLL FOR NEXT