அண்மைக் காலத்தில் நிறைய கவிதைகள் எழுதிக் கொண் டிருப்பவர் கவிஞர் பிருந்தா சாரதி. அடிப்படையில் இவர் சினிமாக்காரராக இருப்பதால், இவரது கவிதைகளில் வந்தமரும் எல்லாப் பொருட்களும் காட்சி விரிப்பாகவே இருக்கின்றன.
‘வானில் பறந்தாலும்
பறவையில் நிழல் மண்ணில்தான்
நிழலைப் பின் தொடர்கிறேன் நான்
என் தோளில் வந்து அமரும்
என்ற நம்பிக்கையோடு’
என்கிற கவிதையே இவருக்கு இந்தப் புத்தகத்துக்கான தலைப்பை எடுத்துத் தந்திருக்கிறது.
இவருடைய இன்னொரு தொகுப்பு ‘எண்ணும் எழுத்தும்’. எண்களின் ஆலாபனை என்றே இதனைச் சொல்லலாம். எண்களின் வழியாக இவர் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். இக்கவிதைகளின் உள்ளீடாக பிரிவுத் துயரைத்தான் இவர் முன்னிறுத்துகிறார். இரண்டு ஊதுபத்திகள் எரிகின்றன. அவற்றிலிருந்து வெள்ளை நிறத்தில் கலைந்த கோடுகளாகக் கசியும் புகைகள் இரண்டும், ஒரு கட்டத்தில் ஒன்றாகி மிதந்து செல்வதைப் பார்க்கிற பிருந்தா சாரதி, தம்மை அழித்துக்கொள்ளும் ஈருயிர்கள் ஓருயிராக ஒருமித்துக் காதலுணர்வதைத் கவிதையாக்கியுள்ளார். புத்தகத்தின் உள்ளே ஓவியர் பழனியப்பனின் நியூமரிக் ஓவியங்கள் புத்தகத்துக்குக் கூடுதல் ஒளி - ஒலி அமைக்கின்றன.
பறவையின் நிழல் | பிருந்தா சாரதி
விலை ரூ.110, வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை - 78 | 99404 46650
எண்ணும் எழுத்தும் |பிருந்தா சாரதி
விலை ரூ.70, வெளியீடு: படி வெளியீடு,
சென்னை 78 | 99404 46650
-மானா