லண்டன் ஹைகேட் இடுகாட்டில் மாலை ஆறு மணிக்குமேல் உள்ளே நுழைந்து, இரவு முழுவதும் அங்கேயே தங்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இரவில் கார்ல் மார்க்ஸின் ஆவியை நீங்கள் சந்திக்கலாம். இப்படி ஒரு நூலையும் எழுதலாம். அமெரிக்கச் சமூகவியல் பேராசிரியர் சார்ல்ஸ் டார்பர் அப்படித்தான் இந்நூலை எழுதியுள்ளார். ஆங்கிலப் பேராசிரியர் சிவக்குமார் எளிமையாக மொழி பெயர்த்துள்ளார்.
ரஷ்யாவில் சோஷலிசம் வீழ்ச்சி யடைந்த பிறகு, குறிப்பாக அமெரிக்கா விற்கு ரஷ்ய ராணுவ அபாயம் நீங்கிய பிறகு, அமெரிக்காவில் மார்க்ஸிய வாசிப்புகள் கூடிவருகின்றன. அமெரிக்காவில் 20 சதவீத மக்கள் வெளிப்படையாகத் தங்களை சோசலிசத்தோடு இணைத் துக் கொள்கிறார்கள் என்று இந்நூல் தெரிவிக்கிறது. மார்க்ஸின் ஆவி இந்நூலில் தத்துவம், வரலாறு போன்ற வற்றைப் பேசவில்லை. நூலில், வெளிப் படையாகத் தெரியாதநிலையில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒன்று, முதலாளியத்தி லிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் காலப்பகுதியைப் “பெரும் நிலைமாற்றம்” (Great Transition) என வரையறுப்பது. அதாவது சமூகப் புரட்சி என்பதை ஓர் ஒற்றைச் சம்பவமாகக் கருதாமல், பலவகைச் சமூக சக்திகள், பலவகை இயக்கங்கள், பலவகைப் பொருளாதார மாதிரிகள், அரசியல் வடிவங்கள் சம்பந்தப்படும் நீண்ட பெரும் செயலாகக் கொள்வது.
நூலின் இரண்டாம் பகுதி உலக மயமாக்கம் மற்றும் சமீபத்திய பொருளாதாரத் தேக்க நிலை குறித்துப் பேசுகிறது. ஹைகேட் இடுகாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் வேறுசில (கெய்ன்ஸ், ஹைமன் மின்ஸ்கி, ஆலன் க்ரீன்ஸ்பன், மில்டன் ப்ரீட்மன் போன்ற) பொருளாதார அறிஞர்களின் ஆவிகளும் இந்த உரையாடலில் கலந்து கொள்கின்றன. பின்னை முதலாளி யத்தின் சில தனித்த குணாதிசயங்களை இவர்களின் உரையாடல்கள் வெளிக் கொண்டு வருகின்றன.
நூலின் மூன்றாம் பகுதி, இருபத்தியொன்ராம் நூற்றாண்டுக் கான ‘பெரும் நிலைமாற்றம்’ எப்படி அமையலாம் என்பதை விளக்குகிறது. முதலாளிய அமைப்பை எதிர்க்கும் பலவகை இயக்கங்கள் - சுற்றுச் சூழலாளர்கள், பெண்ணியவாதிகள், அடையாள இயக்கங்கள், பசுமை இயக்கத்தார் - உருவாகி வருவதையும் அவை ஏதோ ஒரு நிலையில் சோசலிஷ இயங்கங்களோடு ஒன்று படும் என்பதையும் நூலின் ஆசிரியர் தெரிவிக்கிறார். மார்க்ஸின் ஆவி இதனை ஏற்றுக் கொள்வதாகத்தான் தெரிகிறது.
மார்க்ஸின் கருத்துகள் வெகுசன அளவில் பரவுவதற்கான சில இடைநிலை முன்மாதிரிகளை இந்நூல் முன்வைக்கிறது. சோசலிஷம் என்ற மாற்று ஏற்பாட்டை நோக்கி நகரும் பலவகைச் சமூகப் பிரிவினர் என்ற கருத்தை இந்நூல் அழுத்தமாக முன்வைக்கிறது. திருத்தல்வாதம் என்று இந்நூலை நிராகரிப்பவர்கள் கூட இந்நூலினுள் பேசப்பட்டுள்ள அடர்த்தியான விஷயங்களுக்காக இந்நூலை வாசிக்கலாம். மார்க்ஸின் ஆவி செய்யும் சேட்டைகளை அனுபவிக்கும் உணர்வு நிச்சயமாகக் கிடைக்கும். மார்க்ஸியத்தில் தொடர்பு டைய அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
மார்க்ஸின் ஆவி: உலகை மாற்றுவது குறித்த நடுநிசி உரையாடல்கள்
சார்ல்ஸ் டார்பர், தமிழில் ஆர். சிவக்குமார்,
வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310
பக்கம்: 352 விலை ரூ.280, தொலைபேசி 04332 273444