மருத்துவர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் என்பதையெல்லாம் தாண்டி, தீவிரமான வாசகர் கு.சிவராமன். குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்கு வருவதை எப்போதும் வழக்கமாக வைத்திருக்கும் சிவராமன், தன்னுடைய புத்தகக் காட்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு சாதாரணப் பின்னணியிலிருந்து வந்த என்னை வளர்த்தது படிப்புன்னா, என் வளர்ச்சியை விசாலமாக்கினது வாசிப்பு. சின்ன வயசிலிருந்தே புத்தகம்தான் என் முதல் தோழன். ஒரு நல்ல புத்தகத்தைப் பத்திக் கேள்விப்பட்டாலே, அதை உடனே வாங்கிப் படிச்சுடறது என்னோட இயல்பு. என் மனைவி ராஜலட்சுமியும் அப்படித்தான். இப்போ குழந்தைங்களும் எங்களை மாதிரியே தீவிரமான வாசகர்களா உருவாகியிருக்காங்க. என்ன வேலை இருந்தாலும் சரி, ராத்திரி சாப்பிட்டதும் குறைந்தது இரண்டு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கிடுவோம்.
அதே மாதிரி பயணம் போறதுன்னாலும் ரயில் பயணமா அமைச்சுக்கிட்டு, புத்தகங்களை வாசிச்சுக்கிட்டுப்போவோம். எங்களுக்கு இது 10-வது புத்தகக் காட்சி. ஆளாளுக்கு அள்ளியிருக்கோம். பையில கையை விட்டதும் எந்தப் புத்தகங்கள் வருதோ அதை எல்லாம் சொல்றேன்” என்றவர் வரிசையாக ஐந்து புத்தகங்களை எடுத்தார்: இமையத்தின் ‘செடல்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’, தமிழச்சி தங்கபாண்டியனின் ‘வனப்பேச்சி’, ஜான் பெல்லமி பாஸ்டரின் ‘சூழலியல் புரட்சி’.