இலக்கியம்

எளிய ஓவியங்களின் தூரிகைக்காரர்

க.நடராஜன்

சோழ மண்டல் ஓவிய கிராமத்தில் வசித்துவருகிறார் அவர். அவரது வாழ்வைப் போலவே அவரது ஓவியங்களும் மிகவும் எளிமையானவை. சென்னையில் நடக்கும் எல்லா ஓவியக் கண்காட்சிகளுக்கும் தவறாமல் சென்று இளம் ஓவியர்களை உற்சாகப்படுத்துபவர் அவர். இரண்டு முறை மாநில விருதைப் பெற்றிருக்கிறார். ஓவியத் துறைக்கான பங்களிப்புக்காகத் தேசிய அங்கீகாரமும் பெற்றுள்ளார். தொடர்ந்து பல கண்காட்சிகளையும் நடத்திவரும் அவர், ஓவியர் வெங்கடபதி.

1935-ம் ஆண்டு வேலூரில் பிறந்த அவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர்களால் ஊக்கம்பெற்று ஓவியங்களை வரைய ஆரம்பித்தவர். பின்னர், ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்து, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். நுண்கலை மீதான ஆர்வத்தால் ஆசிரியர் வேலையைத் துறந்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். 1961-67-ம் ஆண்டுகளில் மாணவராக இருந்தபோது, இளம் ஆசிரியர்களாக வீரியத்துடன் செயல்பட்ட சந்தான ராஜ், ராம் கோபால், அந்தோனிதாஸ் முருகேசன் முதலிய ஓவியர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர். சிஷ்யா பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ராமாயண ஓவியங்கள்

அவர் வரைந்துள்ள ராமாயணக் காட்சி ஓவியங்கள் அழுத்தமான கோடுகளையும் ஒற்றை வண்ணப்பூச்சையும் அடுக்கு முறையையையும் கொண்டு பயணிப்பவை. தொடர்ந்து காட்சிப் பயிற்சியை மேற்கொண்டு அதன் மூலம் தன் பெற்ற அனுபவத்தை அழகுணர்வுடன் தன்னுடைய கித்தான்களில் வகைப்படுத்துறார். முகமூடிகளால் ஈர்க்கப்பட்டு அவர் உருவாக்கும் ஓவியம் நம்பிக்கை சார்ந்ததாக அவருக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய வட்டத்துக்குள் செயல்பட்டு அதன் துல்லிய வடிவங்களை அடைந்துள்ள அவருடைய ஓவியங்கள், பார்வையாளரைப் பயமுறுத்துவ தில்லை; விலக்கி வைப்பதுமில்லை. பெரும்பாலும் கறுப்பு வெள்ளைப் பூச்சுகளை உள்ளடக்கிய கோடுகளால் உருவாக்கும் எல்லைகளற்ற ஒரு வெளி, நாம் இன்று இழந்துபோன நில அமைப்பு முறையை நினைவுபடுத்தும் தூண்டு கோலாகச் செயல்படுகிறது. கேள்வி, விசாரணை, தத்துவார்த்த முரண் பாடுகளின்றி அன்றாட வாழ்க்கைக்குள் இயங்கும் சாதாரண மனிதனைப் போல் அவர் ஓவியத்துக்குள் பயணிக்கிறார்.

தேர்ந்தெடுத்த ஒன்றைத் தொடர்ந்து செய்வது என்பதைத் திட்டம்போல் கொண்டு செயல்பட்ட சென்னை ஓவியக் கல்லூரியின் தொடர்ச்சியாகவே வெங்கடபதியின் இயக்கம் அமைகிறது. விசாரணையின்றி நீண்டுகொண்டே இருக்கும் இம்முயற்சியில், தங்களின் வாழ்நாளை விசாரணையாக மாற்றிக் கொண்டவர்களில் வெங்கடபதியும் ஒருவர்.

க.நடராஜன் - ஓவியர், சிற்பி. தொடர்புக்கு: natsviolet@yahoo.co.in

SCROLL FOR NEXT