இந்திய விடுதலை என்பது ஏதோ தனிமனிதச் சாதனையல்ல. சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் ‘எல்லோரும் இந்தியரே’ எனும் ஒற்றுமை உணர்வோடு சேர்ந்து நின்று சாதித்த சரித்திரம் அது. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தமிழ் இஸ்லாமியர் பற்றி பலரும் இதுவரை அறிந்திராத வரலாற்று உண்மைகளைத் தேடியெடுத்து நூலாக ஆவணப்படுத்தியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி.
இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கி, விடுதலைக் களத்துக்குப் புது உத்வேகத்தை அளித்த நேதாஜியின் செயல்பாடுகளுக்குத் தோள் கொடுத்த இஸ்லாமியப் பெருமக்கள், இளையான்குடியிலும் முத்துப்பேட்டையிலும் இந்திய விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை நீத்த தமிழ் இஸ்லாமியத் தியாகிகள் என இதுவரை பொதுவெளியில் அதிகம் அறியப்படாத பற்பல இஸ்லாமியத் தியாகிகளைப் பற்றிய செய்திகள் அனைவரும் அறிய வேண்டியவை. பிரிவினைவாத, மதவாதக் குரல்கள் வேகம் பெற்றுவரும் இந்நாளில், நமது வேர்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்நூல்.