இலக்கியம்

உறங்கும் பள்ளி நூலகங்களை எழுப்பிவிடுங்கள்!

செய்திப்பிரிவு

குழந்தைகளிடம் பள்ளி நாட்களிலேயே புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும், பள்ளிகளில் நூலகங்களின் செயல்பாடு உயிர்ப்பானதாக இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பல காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னமும் செயல் அளவில் இதனைச் சாத்தியப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் தீட்டப்படவேயில்லை. வெகு சில பள்ளிகளில்தான் நூலகங்கள் தமக்கான சரியான அர்த்தத்துடன் செயல்படுகின்றன.

பல்லாயிரம் பள்ளிகளிலுள்ள நூலகங்கள் என்பவை பெரும்பாலும் கல்வியாண்டின் இறுதியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிக்கு மாணவர்கள் தயாராவதற்காக மட்டுமே திறக்கப்படும் அலிபாபா குகைகளாகவே இருக்கின்றன. மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்குக் குறிப்பெடுப்பதற்குப் புத்தகங்கள் கேட்டால், இருட்டான அறை ஒன்றிலிருந்த நான்கைந்து அட்டைப் பெட்டிகளைக் காட்டி, “இதில்தான் இருக்கின்றன. உங்களுக்கு வேண்டியதை எடுத்துப் படித்துக்கொள்ளுங்கள்!” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலுள்ள நூலகங்களின் நிலையும் இதுதான். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்கள் நூலகத்தில் இருந்தால்தான், தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதியே வழங்கப்படும் என்ற விதியும் இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் அனுமதி பெறுவதற்கு மட்டுமே ‘காட்டப்படும்’ ஓர் இடமாகவே நூலகம் இருக்கிறது. நூலகத்தைப் பராமரிக்கவென்று பணியாளர் யாரும் தனியே இருப்பதில்லை.

முன்பெல்லாம், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணத்தில் ஒரு பகுதியை நூலக நிதியாக ஒதுக்கி, பள்ளிக்குத் தேவையான நூல்களை வாங்குவார்கள். முந்தைய திமுக ஆட்சியில் ‘புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழவழப்பான தாளில் வண்ணமயமான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு, பள்ளி நூலகங்கள் பற்றி அரசும் பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட’த்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) மூலமாக அனைத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் அந்தந்தப் பள்ளிகளே தங்களுக்குத் தேவையான நூல்களைத் தேர்வுசெய்து வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இப்போது, மாநிலத் தலைமை அலுவலகத்தில் ‘சிறப்பு அனுமதி’ பெற்ற நூல்களை, பதிப்பகத்தினரே நேரில் தந்துவிட்டு, காசோலை பெற்றுச் செல்லும் நிலையே உள்ளது. இப்படியாக, முன்பே பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் பலவும் மாணவர்களின் புத்தக வாசிப்பைத் தூண்டும் நூல்களாக இருப்பதில்லை என்பது கண்கூடு.

புத்தகங்கள் வழியாகப் புதிய காற்றை மாணவர்கள் சுவாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பு என்பது பள்ளிகள்தோறும் ஒரு இயக்கமாகக் கொண்டுசெல்லப்பட வேண்டும். இது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் போன்றோருடைய கூட்டுப் பொறுப்பு என்றாலும், முதன்மையான பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டால்தான் மாற்றம் சாத்தியமாகும்.

SCROLL FOR NEXT