அண்மையில், சொல்லங்காடி வெளியிட்டிருக்கும் எம்.ஜி. சுரேஷின் ‘தந்திர வாக்கியம்’ நாவலை வாசித்தேன். கதை சமகாலம், வரலாற்றுக் காலமென இணையாய்ப் பயணிக்கிறது. ஒன்று, தற்காலத் தொழில்நுட்பத் துறை சார்ந்த பொருளாதாரச் சமனின்மை, பிறிதொன்று, களப்பிரர் கால வரலாற்றுச் சூழல். களப்பிரர் காலம் இருண்ட காலமெனப் பதிவாகியிருப்பது நுட்பமான மாற்று அவதானிப்புகளால் மீள்பார்வைக்குட்படுத்தப் பட்டிருக்கிறது.
சமீப நாட்களாக புதிய உத்வேகத்தோடு கவிதைகளை எழுதிவருகின்றேன். வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கவிதைகளாலேயே கடந்து செல்லும் மனோநிலை கொண்டவன் என்னும் வகையில், சமகாலப் பொருளாதாரம், சமூகம் சார்ந்த பார்வைகளை முன்வைப்பவையாக என் கவிதைகள் அமைகின்றன. என் அண்மைக் காலக் கவிதைகளைத் தொகுத்து ‘முகம் காட்டல்’ என்னும் தலைப்பில் என் ஆறாவது கவிதைத் தொகுப்பை ‘இருவாட்சிப் பதிப்பகம்’ வெளியிடவிருக்கிறது.