இந்தித் திரைப்பட உலகில் 'ரேகா' எனும் பெயர், ஆண்களுக்குக் கிளுகிளுப்பு. பெண்களுக்குக் கிலி.
பானுரேகாவாகப் பிறந்து திரைத்துறைக்குள் ரேகாவாக அவதாரம் தரித்த அவர், நடித்த பெரும்பாலான படங்களில் ஏற்றுக்கொண்ட வேடம் 'தி அதர் வுமன்'. அதாவது, திருமணமான ஆண்கள் மீது காதல் வயப்பட்டு, கடைசியில் அவர்களால் கைவிடப்படும் பெண் பாத்திரம். தன் நிஜ வாழ்க்கையிலும் தான் அதுவாகவே ஆகும் நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை ரேகாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
'காதல் மன்னன்' என்று போற்றப்பட்ட ஜெமினி கணேசனின் மகளாகப் பிறந்து, அந்த அங்கீகாரம் அவரின் கலைத்திறன் மிளிர்ந்த இளமைக் காலத்தில் கிடைக்காது, தாய் புஷ்பவல்லியின் கட்டாயத்தால் மொழி தெரியாமல் இந்தித் திரைப்பட உலகில் நுழைந்து, அன்றைய இந்தி நடிகைக்கான முகவெட்டு, உடல்வாகு, நிறம் இல்லாததால், பலரின் கேலிக்கு ஆளாகி, 16 வயதில் திரைத் துறைக்கு வந்து 18 வயதுக்குள் மூன்று காதல் தோல்விகளைச் சந்தித்து, தற்கொலைக்கு முயன்று, அமிதாப்பச்சனுடன் சேர்த்துக் கிசுகிசுக்கப்பட்டு, 35 வயதில் மணம் முடித்து, அதுவும் தோல்வியடைந்து, தன் கணவனின் தற்கொலைக்கு 'கொலைகாரி' பட்டம் சுமந்து என ரேகாவின் வாழ்க்கை, ரசிகர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் கிளர்ச்சியூட்டும் செய்தி. ரேகாவுக்கோ துன்பியல் நாடகம்.
அந்த நாடகத்தைக் கூடுமானவரை சொல்கிறது யாசர் உஸ்மான் எழுதி ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி' புத்தகம். தமிழ் நடிகைகளுக்கு இப்படிப் புத்தகங்கள் வந்தால் எப்படி இருக்கும்!