ஜெர்மானியக் கவிஞர் பெர்டோல்ட் ப்ரெக்ட்டின் புகழ்பெற்ற கவிதை இது: ‘இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்’. காலந்தோறும் படைப்பாளிகள் தங்கள் காலத்துச் சூழல்களுக்கு எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள். சங்கப் பாடல்களில், வரி அதிகமாக விதிக்கும் மன்னனுக்கே அறிவுரை சொல்லும் புகழ்பெற்ற பாடல் ஒன்றும் உண்டு. நவீன காலத்தில் பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் அப்படி எதிர்வினையாற்றியவர்களே. அந்த மரபு இன்றும் தமிழ்ச் சூழலில் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைச் சமீபத்திய எதிர்வினைகள் பல நமக்குச் சொல்கின்றன.
கடந்த 2016 நவம்பர் 8 அன்று இந்தியப் பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு நாடெங்கும் அசாதாரணமான சூழல் உருவாகியது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்ட இந்த நடவடிக்கை இலக்கு மாறி அடித்தள மக்களையும் நடுத்தரக் குடும்பங்களையும் தாக்கியது. நாடெங்கும் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். தமிழ்ச் சூழலில் மக்களைப் போலவே எழுத்துலகமும் கடுமையான எதிர்ப்பை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியது. அத்துடன் நின்றுவிடாமல் ‘பணமதிப்பு நீக்கம்’ குறித்த தங்கள் எதிர்வினைகளை சிலர் புத்தக வடிவில் வெளியிட ஆரம்பித்தனர். இவ்வளவு குறுகிய காலத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் ஒரு நாவலும் ‘பணமதிப்பு நீக்க’ நடவடிக்கையை எதிர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. புத்தகக் காட்சியிலும் இந்தப் புத்தகங்கள் பெருவரவேற்பைப் பெற்றன. ‘பாரதி புத்தகாலயம்' வெளியிட்ட குறுநூல் ஒன்று, மூன்று லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றிருக்கிறது.
இதற்கு முன்னும் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள், 2ஜி ஊழல், மாட்டுக்கறி பிரச்சினை, கருத்துச் சுதந்திரம் என்று தொடர்ச்சியாகப் பல பிரச்சினைகள் குறித்தும் இந்திய அளவில் உள்ளதுபோலவே தமிழிலும் புத்தகங்கள் நிறைய வெளியாகியிருக்கின்றன. பணமதிப்பு நீக்கப் பிரச்சினையைத் தொடர்ந்து ‘ஜல்லிக்கட்டு தடை’ என்ற பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்குள் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒருசில புத்தகங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இனிவரும் நாட்களில் மேலும் பல புத்தகங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
எந்த ஆயுதத்தையும் விட கருத்தாயுதம் மிகவும் பலமானது என்பதைத் தமிழ் அறிவுலகம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற எதிர்வினைகள் ஜனநாயகத்தை மேலும் மேலும் செழிப்பாக்குவதில் பேருதவி புரிகின்றன. தன்னைச் சுற்றி நடக்கும் சமூக, அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது ஆரோக்கியமான அறிவுச் சூழலின் அடையாளம். இந்தச் சூழல் என்றும் தொடரட்டும்!