இலக்கியம்

தெரீ காதா: மூத்த பெண் துறவிகளின் கவிதைகள்

செய்திப்பிரிவு

பத சாரா எனும் பெண் துறவியின் கதை புத்த மதம் பற்றிய புத்தகங்களில் பிரபலமானது. வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பத சாரா. ஒரு வேலைக்காரரைக் காதலித்து அவருடன் செல்கிறார்; கர்ப்பமாகிறார். வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில், மழைப் புயலில் பிரசவமாகிறது அவருக்கு. பிள்ளையும் கணவனும் இறந்துவிடுகிறார்கள். சோகத்தில் பித்தாகி அலைகிறார். புத்தரால் சோகம் விலக, துறவியாகிறார். ஆனால், மனம் அலைபாய்ந்தபடி இருக்கிறது. ஒரு நாள் வறண்ட நிலத்தில் ஊற்றிய நீர், முதலில் கொஞ்சமும், பிறகு மீதியுமாக நிலத்தில் ஈர்க்கப்படுவதைப் பார்க்கிறார். மனிதரின் ஆயுளின் நீளம் மாறினாலும் கடைசியில் எல்லாம் மண்ணில் போகும் என்று உணர்கிறார். ஒரு நாள், படுக்கும் முன்பு விளக்கின் திரியை இழுத்து அணைத்த கணத்தில், வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலையாவது எப்படி என்று புரிந்துபோகிறது. இதை அவர் கவிதையாக எழுதியிருக்கிறார்.

‘தேரீ காதா’ எனும் புத்தகம், பத சாரா போன்ற, புத்தர் காலத்தை ஒட்டிய பெண் துறவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘தெரீ’ என்றால் பெரியவர்கள், மூத்த பெண் துறவிகள் என்று பொருள். கி.மு. 400 வாக்கில் காஞ்சிபுரத்தில் பிறந்து புத்தத் துறவியான தர்மபாலர் இக்கவிதைகளுக்கு உரை எழுதித் தொகுத்துள்ளார்.

‘தேரீ காதா’ பாலி மொழிப் புத்தகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஏற்கெனெவே வெளிவந்துள்ளன. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்ல்ஸ் ஹேலிஸி (Charles Hallisey) ஆங்கிலத்தில் மீண்டும் மொழிபெயர்த்திருக்கிறார். Infosys நாராயண மூர்த்தியின் குடும்பம் நிதியுதவி செய்து, ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும் மூர்த்தி இந்தியச் செவ்விலக்கிய நூலக வரிசையில் (Murty Classical Library of India) இந்தப் புத்தகம் 2015-ல் வெளிவந்துள்ளது (விலை ரூ. 221, பக். 290).

அந்தக் காலத்தின் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ளவும், பெண்களின் நிலை பற்றியும், புத்த மதம் பரவிய வகை பற்றியும், புத்த மதத்தின் கோட்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம். கவிதைகளில் வெளிப்படும் புதுக் கருக்குக் குலையாத கவி உணர்வும், மூச்சும் எச்சிலும் ரத்தமுமான மனித உயிர்ப்பும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால் எல்லாக் கவிதைகளிலும் ஒரு மகா நிதானம். ஒரு கல்யாணம் காட்சிக்கெனப் போன இடத்தில், குடும்பத்துப் பெரியவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து அவர்கள் நமது கைவிரல்களைப் பற்றிக்கொண்டிருக்க, அவர்களின் மெல்லிய குரலில் அவர்களது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பது போல இருக்கிறது.

எடுத்துக்காட்டாகச் சில வரிகள்:

வீரா, எப்படி அறிவது என்பதை அறிந்தவளே,

இதுவே உன் கடைசி, இந்த உடலைக் கவனி.

வெறும் மரணம் சுமப்பதாக இதை மாற்றிவிடாதே.

மகனே, என் வெட்கங்கெட்ட கணவரும், அவர் வேலை செய்த நிழல் தடுப்பும்

நீர்ப்பாம்பு வீச்சம் அடிக்கும் என் பானையும் அருவருப்பைத் தருகின்றன.

என் கோபத்தையும் தாபத்தையும் ஒழித்தபோது

மூங்கில் பிளக்கும் ஓசை நினைவு வந்தது.

ஒரு மரத்தடிக்குச் சென்று “ஆ! ஆனந்தமே!” என நினைத்தேன்.

அந்த ஆனந்தத்தின் உள்ளிருந்து தியானம் செய்யத் தொடங்கினேன்.

பயணி, தொடர்புக்கு: msridharan@gmail.com

SCROLL FOR NEXT