தமிழில் அறிவியல் கதைகள் என்பதை விட, அறிவியல் சார்ந்த கதைகளே வந்திருக்கின்றன எனலாம். நம் யதார்த்த வாழ்வில் அறிவியல் சூழலை அறிமுகப்படுத்தியவர் சுஜாதா அவரது எழுத்துக்களின் பலம் , ஓர் கதாசிரியரின் நுட்பமும், கற்பனை வளமும், அறிவியல் தொழில்நுட்பமும் கலந்திருந்த விகிதாச்சாரம்தான். கதைகளின் வீச்சு அறிவியல், தொழில் நுட்பம், அதீத வருங்கால வாழ்வு எனப் பல திசைகளில் பரந்து விரிந்திருந்தது. ‘ஜீனோ’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற கற்பனை எதிர்கால வாழ்வுக் கதைகளிலும் மனித உணர்வுகளை மெல்ல, நெருடாமல் உலவவிட்ட திறமை அவருக்கேயுரியது.
அவரது காலத்தில் அறிவியல் கதைகளை எழுத முற்பட்டவர்களில் முக்கியமானவர் இரா.முருகன். கணினித் தொழில்நுட்பத்தில் அவருக்கிருந்த அனுபவம், கதைகளில் தெறிக்கின்றன. இந்த வகையில் ‘சில்லு’, ‘போகம் தவிர்’ போன்ற கதைகளை முக்கியமாகச் சொல்லலாம். ஜெயமோகன், மண்ணின் பாரம்பரிய அறிவின் மணத்துடன் அறிவியலை இணைத்தார். இது புதிய கோணத்தைக் கொடுத்தது என்றாலும், இந்த வகையில் எழுத தேர்ச்சியும் பாரம்பரியம் பற்றிய அறிவும் தேவை. அவரது ‘உற்று நோக்கும் பறவை’ கதை மனப்பிளவு , அதன் காரணிகளான நாளமில்லாச் சுரப்பி தரும் வேதிப்பொருட்கள், தத்துவம் என அழகாக மிளிரும் அறிவியல்சார் கதை.
பெரும்பாலான கதைகள் தொழில்நுட்பத்தையே முன்வைத்த காலத்தில் இரா.முருகனும் ஜெயமோகனும் அடிப்படை அறிவியலையும் மனித உறவுகளையும் கலந்து தந்தார்கள். நளினி சாஸ்திரியின் ‘ஆத்மாவுக்கு ஆபத்து’ அறிவியல் கதை சுஜாதாவாலேயே பாராட்டப்பெற்றது. தமிழ்மகனின் கதைகளும் குறிப்பிடத் தகுந்தவை.
அறிவியல் கதைகள் பெரும்பாலும் சிறுகதைகளாகவே நின்றிருந்தன. திடீர்த் திருப்பங்கள், அறிவியல் தத்துவக் கோட்பாடுகள் என்பதோடு இவை 1,000 சொற்கள் என்ற எல்லையில் அடைபட்டிருந்தன. முழுநீள அறிவியல் நாவல்கள் தமிழில் குறைவு.
தமிழில் அறிவியல் கதைகளுக்கு முன்பே அறிவியல் கட்டுரைகள் வந்திருந்தன. பெ.நா. அப்புஸ்வாமி அறிவியல் கட்டுரைகளின் முன்னோடி எனலாம். தகுந்த அறிவியல் சொற்கள் இல்லாத நிலையில், புதுச் சொற்களை உருவாக்குவதில் உள்ள சிரமங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது சமகாலத்தில் சுஜாதா ஏராளமான அறிவியல் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். தமிழில் கணினி தொடர்பான கலைச்சொல் உருவாக்கத்தில் சுஜாதாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தற்போது என்.ராமதுரை போன்ற ஒருசிலர் அறிவியலை எளிமையான விதத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- சுதாகர் கஸ்தூரி, ‘6174’, ‘டர்மரின் 384’ ஆகிய அறிவியல் புனைகதை நாவல்களின் ஆசிரியர்