இலக்கியம்

தொடுகறி! - தமிழ்ப் புத்தகங்கள் முடக்கப்படுகின்றனவா?

செய்திப்பிரிவு

இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படுகிற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றை இலங்கையின் சுங்கத்துறை முடக்கியோ, தாமதமாக அனுமதித்தோ சிரமங்களை ஏற்படுத்துவதாகப் புலம்பெயர் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் வசிக்கும் எழுத்தாளர் சாத்திரி தான் எழுதிய மூன்று புத்தகங்கள் அடங்கிய புத்தகப் பொதியை சமீபத்தில் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறார். தமிழ்ப் புத்தகங்கள் என்று அடையாளம் காணப்பட்டு அவை தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்ற பிரச்சினையைத் தானும் எதிர்கொண்டிருப்பதாக ரிஷான் ஷெரீஃப் உள்ளிட்டோரும் சாத்திரியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள். இலங்கையில் வாசிப்புச் சுதந்திரமும் மறுக்கப்படுகிறதா என்று எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழுக்கு வந்த நாடோடி இறைவி!

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மீனா கந்தசாமியின் முதல் ஆங்கில நாவல் ‘ஜிப்ஸி காடஸெஸ்’. கீழ்வெண்மணிப் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு சர்வதேசப் பரிசுகளின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவத்தில் உயிர்பிழைத்தவர்களின் நேர்காணல்கள், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் மீனா கந்தசாமி இந்த நாவலை எழுதியிருக்கிறார். சமீபத்தில் எழுத்தாளர் பிரேமின் மொழி பெயர்ப்பில் அணங்கு பதிப்பகத்தால் இந்த நாவல் தமிழில் ‘குறத்தியம்மன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழ்வெண்மணியின் சமீபத்திய இலக்கிய சாட்சியம் என்பது மட்டுமல்லாமல் உலக இலக்கியத்தை நோக்கிக் கீழ்வெண்மணியைக் கொண்டுசென்றது இந்த நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளை இறகும் பாவ்லோ கொய்லோவும்

‘ரஸவாதி’ நாவல் மூலம் உலகம் முழுக்கப் புகழ்பெற்ற பாவ்லோ கொய்லோ, தனது ஒவ் வொரு படைப்பை எழுதத் தொடங்கும்போதும் ஒரு நம்பிக்கையைக் கடைப் பிடிக்கிறார். நடைப்பயிற்சி யின் போதோ, வீட்டில் இருக்கும்போதோ தற் செயலாக ஒரு வெள்ளை இறகைப் பார்க்க வேண்டும் அவருக்கு. முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இதைச் சடங்காகவே பின்தொடர்கிறார். அதேபோல தனது புத்தகத்தின் இறுதிவரைவை பிரிண்ட் அவுட் எடுத்த பின்னரும், தான் கண்ட அந்த வெள்ளை இறகால் ஒவ்வொரு பக்கத்திலும் ஒத்தியெடுப்பதும் அவரது சடங்கில் ஒன்று.

ஜங்க் மெயிலை உதாசீனம் செய்யாதீர்!

ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிக் கவிஞரான அலி காபி எக்கெர்மன் தன் மின்னஞ்சலின் ஜங்க் மெயில் பகுதியைப் பார்வையிட்டபோது தற்செயலாக அந்த மின்னஞ்சல் கண்ணில் பட்டிருக்கிறது. எக்கெர்மனின் ‘இன்ஸைடு மை மதர்’ கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1,10,27,775 தொகையுடன் விண்ட்ஹாம்-காம்ப்பல் பரிசு கிடைத்திருப்பதாக அந்த மின்னஞ்சலில் தகவல் இருந்தது. ஏதோ நைஜீரிய, கென்ய, செனெகல் மின்னஞ்சல் போல என்று அவர் முதலில் இருந்துவிட்டாராம். சரிபார்த்த பிறகு தன் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. இந்தப் பரிசு தனக்குப் புதுவாழ்க்கையைத் தரும் என்று எக்கெர்மன் நம்புகிறார். முக்கியமாக, தனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றுசேர இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கிறார் எக்கெர்மன்.

SCROLL FOR NEXT