இலக்கியம்

பழைய சொர்க்கத்தைத் தேடி..

த.நீதிராஜன்

எங்கே அந்த சொர்க்கம் என்ற தலைப்பில் வே. குமரவேல் ஒரு நூலை எழுதி உள்ளார்.அது அறிவார்ந்த வாதங்களைக் கொண்ட, சுவையான கடிதங்களின் தொகுப்பாக உள்ளது.

அந்த விவாதம் திராவிடமா? தமிழா? எது சரி என்பதில் தொடங்குகிறது. அதன் பிறகு தமிழ்தேசியமா? திராவிட தேசியமா? எது சாத்தியம் என்று தொடர்கிறது. இதற்கு இடையில் உலகமயம்,தாராளமயம் ஏற்படுத்தி இருக்கிற தீமைகள் வரை செல்கிறது.

உலகமயம்,தாராளமயம் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிற தீமைகளைப் பற்றிப் பேசும் புத்தகம் திராவிட இயக்கத்தினர் காங்கிரசைத் தவிர்த்து, பொதுவுடமை இயக்கத்தோடு ஏன் தொடர்ச்சியான உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கேட்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் மீது வைக்கப்பட்ட குடும்ப அரசியல் குற்றச்சாட்டு தற்போது திராவிட இயக்கத்தின் மீதும் குறிப்பாக திமுகவின் மீது வைக்கப்படுவதைக் குத்திக்காட்டுகிறது நூல்.

முதிர்ந்த திராவிட இயக்கக் கொள்கை வீரர்கள் இன்று சலிப்போடு இருப்பதையும் கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்கம் பற்றிய ஒரு விமர்சனபூர்வமான ஆய்வாகவும் இப்புத்தகம் இருக்கிறது. திராவிட இயக்கம் மலர்ந்த போது தமிழ்ச் சமூகத்தில் இருந்த ஒரு அறிவுத்தேடல் காலகட்டம் சொர்க்கமாக நூலாசிரியருக்கு இருக்கிறது. அது தற்போது மழுங்கி நரகம் போல மாறிவிட்டதையும் அரசியலில் அறநெறிகள் தாழ்ந்து விட்டதையும் அவர் ஒரு உரத்த சிந்தனை வடிவிலே விவாதிக்கிறார்.

திராவிடம் எனும் கருத்து மனித சமூக வளர்ச்சியின் ஒரு கட்டடத்தில் தோன்றிய ஒரு தற்காலிக கருத்து.திராவிட-ஆரிய மொழிக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்ற மொழியியல் கருத்தை இரு வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற மானுடவியல் கருத்தாக நூறாண்டுகளுக்கு முன்பான அறிவுத்துறையினர் தவறாகப் புரிந்து கொண்டனர்.தற்போது திராவிடர்-ஆரியர் என்ற புரிதல்களுக்கு அப்பால் மனித அறிவு முன்னேறி போய்விட்டது.

1912-இல் சென்னை மாகாணத்தில் சென்னைப் பல்கலைகழகத்தில் பதிவு செய்து இருந்த 15,216 பட்டதாரிகளில் 10,269 பேர் பிராமணர்கள்.1892-1904க்கு இடையே சென்னை மாகாணத்தில் இன்றைய ஐஏஎஸ்க்கு இணையான ஐசிஎஸ் தேர்வில் தேறிய 16பேரில் 15 பேர் பிராமணர்கள். இதன் விளைவாக, சமூகத்தின் மேல்தட்டில் மிகப் பெரும்பான்மையான பங்கை பிராமணர்கள் வைத்துக் கொண்டதுதான் பிராமணல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் வளர்வதற்கான இடத்தை கொடுத்தது. சமூகச் சூழலில் மாற்றம் ஏற்பட ஏற்பட திராவிடக் கருத்துக்கள் கிழடு தட்டிப் போகும். புதிய கருத்துகள் வலிமை அடையும்.இயற்கையின் செயல்பாட்டிலும் சமூகத்தின் செயல்பாட்டிலும் பல ஒற்றுமைகளும் இருப்பது உண்டு. நடுக்குளத்தில் கல்லெ றிந்தால் அது எழுப்பும் நீர் வளையங்கள் விலகிச்செல்லச் செல்ல விரிவானதாகவும் அதே நேரத்தில் குளத்தின் நடுவில் ஏற்பட்ட சிறு வளையத்தை விடக் குளக் கரையைத் தொடுகிற விரிந்த பெரிய வளையம் பலவீனப்பட்டு இருப்பதை நாம் காணலாம்.

சமூகம் எனும் குளத்தில் எறியப்படுகிற தத்துவம் என்ற கல் எழுப்பும் இயக்கங்கள் எனும் வளையங்களுக்கும் இதுவே பொருந்தும். தொடர்ந்து கற்கள் வீசப்படும் குளமே நமது சமூகம். திராவிட இயக்கம் என்பது பழைய சொர்க்கம். அது வராது. இனி புதிய சொர்க்கத்தை தான் படைக்க வேண்டும்.

நூல்: எங்கே அந்த சொர்க்கம்?

ஆசிரியர்: வே. குமரவேல்

பதிப்பகம்: முல்லைப் பதிப்பகம்,

சென்னை-40

தொலைபேசி: 044-2616 1196.

விலை: ரூ.200/-

SCROLL FOR NEXT