தமிழில் சமீபத்தில் வெளியான உலகக் கவிதை மொழிபெயர்ப்புகளின் பெருந்தொகுப்பு எஸ். சண்முகத்தின் ‘துயிலின் இரு நிலங்கள்’. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் மொழிபெயர்த்து வெளியிட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகள்தான் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மொழிபெயர்ப்புகள் ஃபேஸ்புக்கில் வெளியானபோது, வாசகர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியில் உடனுக்குடன் வரவேற்பைப் பெற்றன.
உலகக் கவிஞர்களில் பழங்காலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய காலப் பகுதிகளில் நாம் அறிந்திருப்பவர்களோடு கணிசமாக, நாம் அறிந்திராத பல கவிஞர்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள். தனித்தனிக் கவிதைகளாக ஃபேஸ்புக்கில் வந்தபோதே சண்முகம் இந்தக் கவிதைகளில் பயன்படுத்திய மொழி வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றது. ‘கேட்டல்’ என்பதற்குப் பதிலாக ‘செவிகொள்ளுதல்’ என்ற சொல்லை சண்முகம் பயன்படுத்தியிருப்பது சில இடங்களில் அழகூட்டுகிறது. அதேபோல், ‘உறு’ என்ற வினைச்சொற்களைச் சேர்த்து ‘அப்பாலுற்றது’, ‘இறுதியுற்றது’, ‘ஆட்சியுறுகிறார்கள்’, என்பதுபோன்ற பிரயோகங்களை உருவாக்கிப் பார்த்திருக்கிறார். ஓரிரு இடங்களில் நன்றாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு ஏற்படுகிறது; அதிலும் ‘விரும்புறுகிறேன்’ என்பதெல்லாம் மரண அவஸ்தை.
பொருந்தாத இடங்களிலெல்லாம் ‘-ஆர்ந்த’ ஒட்டி நெளியவைக்கிறார் சண்முகம். ‘இருளார்ந்த’, ‘ஒளியார்ந்த’ என்பதையெல்லாம் தாண்டி ‘துன்பியலிலார்ந்து’ என்று சொல்லும்போது சற்றே நிமிர வைக்கிறார். அது என்ன ‘துன்பியலிலார்ந்து’ என்று கவிதையின் ஆங்கில மூலத்தைத் தேடிப் போனால் அங்கே ‘துயரம்’ (tragic) காத்திருக்கிறது. ‘Tragic accident’ என்று ஆங்கிலத்தில் இருந்திருந்தால் ‘துன்பியலிலார்ந்த விபத்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்குமோ என்ற விபத்து அச்சம் நமக்கு ஏற்படுகிறது.
ஒவ்வொரு கவிதையையும் அதன் ஆங்கில மூலத்தையோ, ஆங்கில மொழிபெயர்ப்பையோ வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் சிரமமேயின்றிப் பல்லிளிக்கின்றன பெரும்பாலான மொழி பெயர்ப்புகள். பல உதாரணங்களைக் காட்ட லாம். ஓசிப் மெண்டல்ஸ்டெம் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘Where they are taking me’ என்பது மொழியாக்கத்தில் ‘அவர்கள் எங்கு என்னிடம் பேசுகிறார்கள்…’ என்றும், ‘I want to sleep’ என்ற வரி ‘நான் உறங்கப் போகிறேன்’ என்றும் தமிழ் உருவம் கொள்கிறது. இன்னொரு கவிதையில், ‘And bind to the shell’ என்ற வரி ‘சங்கிற்குக் குருடாய் இருக்க’ என்று தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. ‘bind’ என்பது ‘blind’ ஆக மொழியாக்கம் பெற்றிருக்கிறது.
இது ஓரிரு கவிதைகளில் மட்டுமல்ல; பெரும்பாலான கவிதைகளில் நிகழ்ந்திருக்கும் ‘துன்பியலிலார்ந்த’ சம்பவம்! யெவ்டுஷென்கோவின் ரஷ்யக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘Deliberate indifference to the living,/ deliberate cultivation of the dead’ என்ற வரிகள் தமிழில் ‘வாழ்தலுக்குள் வேண்டுமென்றே வேற்றுமையின்மை செய்யப்பெறுகிறது, வேண்டுமென்றே மரித்தோரை அறுவடை செய்தல்’ என்று ‘மொழியாக்கமுறு’கின்றன. யெவ்டுஷென்கோவின் இன்னொரு கவிதையில் ‘Worlds die in them’ என்ற வரி ‘உலகம் அவர்களுக்குள் இறங்குகிறது’ என்று நமக்குள் இடியாய் இறங்குகிறது. இதேபோல், லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர் ரொபர்த்தோ பொலான்யோவின் கவிதையொன்றில் ‘a television commercial’ என்பது ‘தொலைக்காட்சி வணிகத் திரை’யாகத் தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. அங்கன்வாடிக் குழந்தைகள்கூட ‘தொலைக்காட்சி விளம்பரம்’ என்று சொல்லிவிடுமே. பெஸோவாவின் கவிதையில் 'spring' என்ற சொல் தமிழில் ‘இலையுதிர்காலமாகிறது’!
எழுத்துப் பிழை, தவறான மொழிபெயர்ப்புகள் முதலானவற்றைப் பட்டியலிட்டால் ஒரு பக்கத்துக்குக் குறைந்தபட்சம் 5 பிழைகள் என்ற வீதத்தில் 400 பக்கங்களுக்கும் சேர்த்து 2,000 பிழைகளுக்குக் குறையாது.
இவ்வளவு பிழைகள் இருந்தாலும் இந்த மொழிபெயர்ப்புகளைப் பலரும் கொண்டாடியிருப்பதற்குக் காரணங்கள் என்னென்ன?
முதல் காரணம், குளறுபடியான மொழிபெயர்ப்பால் மேல்தோற்றத்துக்கு ஒரு கவித்துவத்தை இந்த மொழிபெயர்ப்புகள் கொண்டிருப்பது. (சில சமயம் கூகுள் ‘ஆங்கிலம்-தமிழ்’ மொழிபெயர்ப்பில் இந்த அம்சத்தைக் காணலாம்). எடுத்துக்காட்டாக, ‘சங்கிற்குக் குருடாய் இருக்க’, ‘உலகம் அவர்களுக்குள் இறங்குகிறது’ என்பது போன்ற வரிகளை (அவற்றின் ஆங்கில மூலத்தை மறந்துவிட்டு) பார்க்கும்போதே இதில் ஏதோ கவித்துவம் இருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா! கவிதை பெரும்பாலும் அதர்க்கமான ஒரு வெளியில் இயங்குவது. முன்வரிக்கும் அடுத்த வரிக்கும் தர்க்கபூர்வமான தொடர்பு இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே, குழப்படியான ஒரு மொழிபெயர்ப்பில் மேல்தோற்றத்துக்கு எழும் கவித்துவம் நம்மை மயக்கிவிடுகிறது. கூடுதலாக, சங்க இலக்கிய மொழியின் வாசம், அங்கங்கே கவித்துவம்!
அனைத்துக் கவிதைகளிலும் சண்முகமே துருத்திக்கொண்டு தெரிகிறார். எல்லாக் கவிதைகளிலும் ஒரே மாதிரியான தொனி, ஒரே மாதிரியான சொல்முறை! உண்மையில் இந்தத் தொகுப்பைக் கீழிறக்கிய அம்சம் எதுவென்று பார்த்தால் படைப்பை மீறித் தன்னை முன்னிறுத்திய மொழிபெயர்ப்பாளரின் ஆளுமைதான். சுதந்திர மொழிபெயர்ப்பு, தழுவல் என்றெல்லாம் தப்பித்துக்கொள்ள முடியாது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க முயன்று பல இடங்களில் பிழையாக மொழிபெயர்த்திருக்கிறார் என்பதே உண்மை!
புத்தகமாகக் கொண்டுவரும்போது சரிபார்க்க வேண்டுமல்லவா? அவ்வளவு அவசரம்! மதிப்புக்குரிய, மூத்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்புகளை ‘திருத்தியிருக்கிறார்’ என்ற தகவல் புத்தகத்தின் தொடக்கத்தில் தரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படி எதைத் திருத்தியிருக்கிறார் என்பது எங்கும் தென்படவில்லை.
வாசகருக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லாத தொகுப்பு இது. பெயர்கள், விவரங்களில் அவ்வளவு பிழைகள். ஃபயத் ஜாமிஸ் (Fayad Jamis) என்ற கவிஞரைப் பற்றிய குறிப்பில் ‘க்யுபா மொழிக் கவிஞர்’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. க்யுபா மொழி என்று ஏதும் இருக்கிறதா? க்யுபாவைச் சேர்ந்த ஸ்பானிஷ் மொழிக் கவிஞர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்! எந்த விதத்திலும் உதவாத குறிப்புகள்! அகரவரிசையிலோ, நாடுகள் வரிசையிலோ, காலவரிசையிலோ கொடுக்கப்படவேயில்லை. புத்தகத்தின் தொடக்கத்திலும் பொருளடக்கம் ஏதும் இல்லை.
உண்மையில், நல்ல வரிகள் இல்லாமலில்லை. அவற்றில் பலவும் இந்த மதிப்புரையாளருக்கு ஆங்கில மூலம் கிடைக்கப்பெறாதவை. எடுத்துக்காட்டாக, இந்தக் கவிதை:
‘இடியுடன் மின்னும் பெருமழையினால் மூண்ட
இரு அடிமரங்கள் நாம், நள்ளிரவு வனத்தின் இரு சுடர்கள்.
இராப்பொழுதின் ஊடாய் பறக்கும் இரு எரிகற்கள் நாம்,
ஒற்றை ஊழின் இரு முனையுள்ள அம்புகள்.
…உளத்துயரின் இரு நிழல்கள் நாம்.
…ஒற்றைச் சிலுவையின் இரு கரங்கள் நாம்.’
இதுபோல் சில கவிதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை மிகுந்த கவனத்துடன் மொழிபெயர்த்துச் சிறிய புத்தகமாக வெளியிட்டிருந்தால்கூட உருப்படியாக இருந்திருக்கும்.நமக்குக் கனவுகள் நிறைய இருக்கலாம், ஆனால் அந்த அளவுக்குச் செயல் வேகமும் தரமும் பொறுப்புணர்வும் இல்லாதபோது உன்னதத்தை எட்டிப்பிடிப்பது எப்படி?
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
துயிலின் இரு நிலங்கள்
(பிறமொழிக் கவிதைகள்)
தமிழாக்கம்: எஸ். சண்முகம்,
விலை: ரூ. 360
தோழமை வெளியீடு, சென்னை-78.
தொடர்புக்கு: 99401 65767