கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் 17 ஆண்டுகளாக வழங்கப்படுவது இயல் விருது. வாழ்நாள் சாதனையாளருக்கான இந்த ஆண்டு விருது கவிஞர் நா.சுகுமாரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாகக் கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், புனைவு, இதழியல் பணிகளில் ஈடுபட்டுவருபவர் சுகுமாரன். இதற்கான விருதளிப்பு விழா கடந்த 18-ம் தேதி கனடாவில் நடைபெற்றது.
இயல் விருதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மற்ற விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை ‘கணிமை விருது’ த. சீனிவாசனுக்கும், கவிதைப் பிரிவில் ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ என்ற தொகுப்புக்காக ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கும், புனைவிலக்கியப் பிரிவில் ‘ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ நூலுக்காக திரைப்பட இயக்குநர் மிஷ்கினுக்கும், விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோல, மொழிபெயர்ப்பு பிரிவில் ‘இறுதி மணித்தியாலம்’ என்ற தலைப்பில் சிங்களக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரீஃபுக்கும், தமிழிலிருந்து ஜெர்மன் மொழியில் ‘வாழை இலையும் வீதிப் புழுதியும்’ என்ற தலைப்பில் 14 சிறுகதைகளை மொழிபெயர்த்துப் புத்தகமாக வெளியிட்ட ஈவ்லின் மாசிலாமணிக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ் இலக்கியச் சிறப்புச் சாதனை விருதுகளை இந்த ஆண்டு டேவிட் ஷுல்மன், இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கவிஞர் சுகுமாரன் தன் விருதுப் பணத்தில் ஒரு பகுதியையும், இயக்குநர் மிஷ்கின் முழு விருதுப் பணத்தையும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வழங்கினார்கள்.
யுவபுரஸ்கார் அறிவிப்பு: சாகித்ய அகாடமியின் சிறார் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’விருதுக்காக குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் தேர்வாகியிருக்கிறார். இதேபோல், இளம் எழுத்தாளர்களுக்கான ‘யுவபுரஸ்கார்’ விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’ கவிதை தொகுப்புக்காக மனுஷி தேர்வாகியிருக்கிறார். விருது பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!