மாவட்ட, மண்டல எல்லைகளைக் கடந்து மாநிலம் தழுவிய புத்தகத் திருவிழாவாக வளர்ந்து நிற்கும் ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று உற்சாகமாகத் தொடங்கியிருக்கிறது. நாமும் புத்தகத் திருவிழா நடத்தினால் என்ன என்ற உணர்வையும் ஊக்குவிப்பையும் மற்ற மாவட்டங்களுக்கு வழங்கிய இந்தத் திருவிழா, ஆண்டுதோறும் புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருக்கிறது.
வாசகர்கள் ஆதரவால் வணிகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற காரணத்தால், இந்த ஆண்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் அரங்கு கேட்டு விண்ணப்பித்திருந்தன. இதில் 230 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால், தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தொடுத்த மாலைபோல காட்சி தருகிறது ஈரோடு புத்தகக் காட்சி. சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்தபடியாக, ஈரோடு புத்தகக் காட்சிக்குத்தான் புதிய புத்தகங்கள் அதிகமாக அச்சிடப்படுகின்றன என்கிறார்கள் பதிப்பாளர்கள்.
புத்தகக் காதலர்கள் எப்படியும் தேடிவந்துவிடுவார்கள் என்றாலும், மற்றவர்களை வரவைப்பதற்கும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது இந்தத் திருவிழாவை நடத்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவை. இதற்காக மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலமும், பதாகைகள் வாயிலாகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள வாசகர் வட்டங்களுடனும் கலந்து பேசி, திருவிழாவில் அவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொடக்கப் பள்ளியில் தொடங்கி உயர்கல்வி நிறுவனங்கள் வரையில் விழாவில் பங்கேற்குமாறு சுற்றறிக்கை அனுப்புவது, மாணவர்கள் பங்கேற்கிற போட்டிகளை நடத்துவது போன்ற பணிகளும் நடைபெறுகின்றன. புத்தகக் காட்சியின் ஒரு அங்கமாகப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகள் பங்கேற்கும் சிந்தனையரங்கமும் நடத்தப்படுகிறது. அதேபோல எழுத்தாளர்கள் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு வகைகளில் இந்த அறிவுத் திருவிழாவுக்கு வந்து சேரும் வாசகர்களைப் புத்தகங்களை வாங்க வைக்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான புத்தகங்களோடு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பார்வையிட கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. புத்தகங்கள் 10% கழிவு விலையில் விற்கப்படுகின்றன. மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு, அதில் சேமித்த தொகையைக் கொண்டு புத்தகம் வாங்குவோருக்குக் கூடுதலாக 10% கழிவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 250 ரூபாய்க்கு மேல் நூல்களை வாங்கும் மாணவர்கள் ‘நூல் ஆர்வலர்’ என்ற சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு தொழில்துறை, வர்த்தக நிறுவனப் பணியாளர்களையும் புத்தகம் வாங்க வைப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன்படி, சமபந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் ஊழியர்களுக்கு ரூ.100 மதிப்புள்ள புத்தக கூப்பன்களை வழங்கியுள்ளன. இதுபோன்ற முயற்சிகளால் கடந்த ஆண்டைவிட (ரூ.7 கோடி) விற்பனை எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகத் திருவிழாவுக்கு வரும் வாசகர்கள் எந்த வித அசௌகரியத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது என்று வாகன நிறுத்துமிடம், விசாலமான நடைபாதையுடன் கூடிய காற்றோட்டமான புத்தக அரங்குகள், உணவகம், கழிப்பறை போன்ற வசதிகளும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் ஈரோட்டில் எந்த தங்கும் விடுதியிலும் இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிறைய வாசகர்கள் வந்திருப்பதே இந்த விழாவின் பிரம்மாண்டத்தை உணர்த்தப் போதுமானது.
நேற்று தொடங்கிய இந்தத் திருவிழா ஆகஸ்ட் 16-ம் தேதி வரையில் மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் புத்தகக் காட்சியைப் பார்வையிடலாம். சில குறிப்பிட்ட புத்தகங்களுக்குக் விலையில் கூடுதல் கழிவு வழங்கப்படுகிறது.
புத்தக ஆர்வலர்களும் ஆசிரியர்களும் ஒருமுறையேனும் வந்து செல்ல வேண்டிய இடம் இது. பெரியார் பிறந்த ஈரோடு, வாசகர்களை அன்புடன் அழைக்கிறது!
- எஸ்.கோவிந்தராஜ், தொடர்புக்கு: govindaraj.s@thehindutamil.co.in