அடுத்த நாவல் ஆரம்பம்!
‘கெட்ட பையன் சார் இந்தக் காளி. பார்பி நாவலைத் துவக்கிவிட்டேன். வண்டி இனி முடிக்காமல் நிற்காது. எல்லாம் கூடி வந்த மாதிரித்தான் தெரிகிறது. காலம் கை பிடித்து வழிநடத்த வேண்டும்’ என்று ஆரம்பித்திருக்கும் சரவணன் சந்திரன் நாவலின் தொடக்கப் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷாட்டையும் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்!
கரன்ஸியில் இடம்பிடிக்கிறார் ஜேன் ஆஸ்டின்
பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினின் உருவப்படம் விரைவில் இங்கிலாந்தின் பத்து பவுண்ட் பணத்தாள்களிலும் இரண்டு பவுண்ட் நாணயங்களிலும் இடம்பெறவிருக்கிறது. அநேகமாக, ஜேன் ஆஸ்டினின் 200-வது நினைவுநாளையொட்டி ஜூலை மாதத்தில் புதிய பணத்தாள்கள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மகாராணிக்கு அடுத்தபடியாக கரன்ஸியிலும் நாணயங்களிலும் இடம்பிடிக்க இருக்கிறார் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டன். மகாராணியைத் தவிர்த்து மற்ற பெண்களின் படங்கள் பணத்தாள்களில் இடம்பெறுவதில்லை என்று நீண்ட நாட்களாக நடந்துவந்த போராட்டங்களின் விளைவு இது.
விமானம் ஏறிய கவிஞர்
மதுரையின் புராதன நினைவையும் தற்போதைய இருப்பையும் தொடர்ந்து கவிதைகளாக்கி மதுரையின் அடையாளமாக மாற்றியவர்களுள் ஒருவர் கவிஞர் ந. ஜயபாஸ்கரன். மதுரை வெண்கலக் கடைத் தெருவிலேயே வசிக்கும் இவர், தன் கவிதைகளைப் போலவே தன் வாழ்நாளில் அதிகமாகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டதில்லை. தனது அமெரிக்கப் பயணத்துக்காக ந.ஜயபாஸ்கரன் முதல்முறையாக விமானம் ஏறியிருக்கிறார். தனது மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் அவர், மாசசூஸட்ஸ் மாகாணத்திலுள்ள ஆம்ஹெஸ்ட்டு நகரத்துக்குச் சென்று தனது ஆதர்சக் கவியான எமிலி டிக்கின்ஸனின் வீட்டைப் பார்க்கவிருக்கிறார்.
கணக்கிலிருந்து கவிதைக்கு...
பொள்ளாச்சி அருகேயுள்ள பில்சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ப. காளிமுத்து. பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்துள்ள இவர், கவிதைகளும் எழுதி வருகிறார். “ஸ்கூல்ல படிக்கையில, கணக்கு வாத்தியாரு இடையிலே கவிதையும் சொல்வாரு. அதுதான் எனக்குக் கவிதை எழுதணும்னு ஆர்வத்தைத் தந்துச்சு. கவிதைப் புத்தகங்களை தேடிப் படிச்சேன். கல்யாண்ஜி, அம்சப்ரியாவோட கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒண்ணு ரெண்டு கவிதைக சிறுபத்திரிகையிலேயும் வந்திருக்கு...” என்று பூரிப்போடு பேசும் காளிமுத்துவின் பெற்றோர் கீரை வியாபாரம் செய்பவர்கள். தன் கவிதை வெளியான சிறுபத்திரிகையை அப்பாவிடம் காட்ட, “நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து எழுது..!” என்று சொல்லியிருக்கிறார். இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார் காளிமுத்து.