இலக்கியம்

தொடுகறி: திரையேறும் நாவல்கள்

செய்திப்பிரிவு

திரையேறும் நாவல்கள்

கடந்த ஆண்டு திரைக்கு வந்து பரவலான வரவேற்பைப் பெற்ற ‘விசாரணை’ திரைப்படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு நாவல்கள் தற்போது திரைப்படமாகிவருகின்றன. கிராமிய மணம் வீசும் நாவல்களுக்காகக் கவனிக்கப்படுபவர் சு. தமிழ்செல்வி. இவரது ‘கீதாரி’ நாவலைத்தான் இயக்குநர் சமுத்திரகனி ‘கிட்ணா’ என்ற தலைப்பில் தற்போது திரைப்படமாக இயக்கிவருகிறார். அதேபோல், சமீபத்திய கனிம வளக் கொள்ளையை வரலாற்றுப் பின்னணியில் பேசிய இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவலை மீராகதிரவன் படமாக்குகிறார். திரையும் இலக்கியமும் ஊடாடினால் வாசகருக்கும் ரசிகருக்கும் கொண்டாட்டம்!

சமூக நீதிக்கான மாதம்

கடந்த மூன்று ஆண்டுகளாகச் சென்னையிலுள்ள பனுவல் புத்தக நிலையம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் மாதத்தைச் சமுக நீதிக்கான மாதமென்ற வகையில் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திவருகிறது.

இந்த ஆண்டு ‘பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட ஜனநாயகம்’ என்ற தலைப்பில் அவரின் எழுத்துகளிலிருந்து வாசிப்புகள், புத்தகத் திறனாய்வுகள், திரையிடல்கள், கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மாலையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்விக்கான இயக்கமாய் மாறிய ‘ஆயிஷா’

இருபது ஆண்டு களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இரா. நடராசனின் ‘ஆயிஷா’ குறு நாவல் இதுவரை ஸ்நேகா பதிப் பகம், வாசல் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் ஆகியவற்றின் வெளியீடு களாகக் கிட்டத்தட்ட 40 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நூல் படியெடுத்துக் கொடுக்கப் பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. “இந்தப் புத்தகம் கல்விக்கான இயக்க மாய் மாறியுள்ளது.

ஆசிரியர்களின் கூட்டங்கள், பள்ளி மற்றும் திருமண விழாக்கள் எனப் பல இடங்களிலும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன” என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் க. நாகராஜன். ‘ஆயிஷா’ நூல் இதுவரை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

ஒன்று இல்லையென்றால், மற்றொன்று!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. ஷெரில் ஸேண்ட்பர்க், ஆப்ஷன் பி (Option B) என்கிற புத்தகத்தை உளவியல் ஆலோசகர் ஆடம் கிரான்ட்டுடன் இணைந்து எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. அதுபோன்ற நேரங்களில் அந்த இடத்திலேயே தேங்கி நின்றுவிடாமல் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறதாம். “என் கணவர் இறந்து சில வாரம் கழித்து, அப்பாவும் மகனும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு செயல்பாட்டை என் மகனுடைய பள்ளியில் கொடுத்திருந்தார்கள். என் கணவர் இல்லையே என்று வருந்தினேன். ‘அவருக்குப் பதில் வேறொருவரை உன் மகனோடு சேர்ந்து அந்த வேலையைச் செய்யச் சொல். ஆப்ஷன் ஏ இல்லையென்றால் ஆப்ஷன் பி’ என்று அவருடைய நண்பர் சொல்ல.. அந்த நிமிடம் முதல் அதுவே என் தாரக மந்திரமாக இருந்தது” என்று சொல்கிறார் ஷெரில்.

SCROLL FOR NEXT