இலக்கியம்

அசோகமித்திரனை ஏன் வாசிக்க வேண்டும்?

அரவிந்தன்

நவீனத் தமிழிலக்கியத்தின் பெரும் பகுதி புரியாது என்ற பொதுவான பார்வை உள்ளது. இந்தக் கூற்று மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அந்த உதாரணங்களில் முதன்மையானவையாக அசோகமித்திரனின் படைப்புகளைச் சுட்டிக்காட்டலாம். அசோகமித்திரனின் அடையாளங்களுள் மிகவும் முதன்மையானது, சட்டென நம்மைக் கவர்வது அவருடைய எளிமை. நேரடியான, தெளிவான நடையைக் கொண்டவர். எந்த இடத்திலும் சிக்கலோ திருகலோ இருக்காது. படிமங்களின் சுமை இருக்காது. பெரிய வாக்கியங்கள் இருக்காது. புரியாத வாக்கியமோ சொல்லோ ஒன்றுகூட இருக்காது. அடிப்படைத் தமிழறிவு கொண்ட யாரும் எளிதில் வாசித்து உள்வாங்கக்கூடிய எழுத்து அசோகமித்திரனுடையது.

ஆனால், இந்த எளிமை நம்மை ஏமாற்றி விடக்கூடியது. அவரது கதைகளின் உயரமும் ஆழமும் தெரியாத அளவுக்கு மறைத்துவிடக் கூடிய எளிமை இது. சாதாரண மனிதர்கள், சாதாரண நிகழ்வுகள், அவர்களுடைய பிரச்சினைகள், உணர்வுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அசாதாரணமான உணர்வை ஏற்படுத்திவிடக்கூடிய எழுத்து அவருடையது. சாதாரண அம்சங்களின் மூலம் சாதாரணச் சொற்கள் மூலம் அசாதாரணமான அனுபவங்களையும் தரிசனங்களையும் ஏற்படுத்திவிடுகிறார் அசோகமித்திரன். எளிமை இங்கே உன்னத நிலையை எய்துவதை உணர முடிகிறது. அதுதான் அசோகமித்திரனின் கலை.

காட்சிகளின் சாட்சி

இதை எப்படிச் சாதிக்கிறார்? நிகழ்வு களையும் யதார்த்தமான காட்சிகளாக மாற்றி விடுகிறார். காட்சியை விவரிக்க அவர் மெனக் கெடுவதில்லை. நிகழ்வைக் காட்சியாக மாற்றி முன்வைக்கிறார். காட்சிகளின் சாட்சியாகவே அவர் இருக்கிறார். அவறைப் படித்துக் கொண்டே போகும்போது நாமும் அவரது காட்சிகளுக்குச் சாட்சிகளாகிவிடுகிறோம்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட இதே அணுகுமுறையையே கொண்டிருக்கிறார். உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றை அவை உருவாகி வரும் விதத்திலேயே கூற முனைகிறார். அலங்காரமற்ற நேர்முக வர்ணனைப் பாங்கில் உணர்வுகளுக்கு மொழி வடிவம் தருகிறார். உணர்வுகளை மறைக்கும் திரை களை அகற்றிக் காட்டுகிறார். பாத்திரங்களின் மன உணர்வுகளை வாசகர் நேரடியாகக் காண்பது இதன் மூலம் சாத்தியமாகிறது. ‘மஞ்சள் கயிறு’ போன்ற பல கதைகளில் பாத்திரத்தின் மன ஓட்டத்தைப் படிக்கையில் உணர்வுகள் காட்சிப் படிமங்களாக மாறும் ரசவாதம் புரியவரும்.

பாத்திரங்களின் உணர்ச்சிகளில் பட்டுக் கொள்ளாமல், அவற்றில் தோயாமல், அவற்றை யதார்த்தமான சொற்சித்திரங்களாக மாற்றி முன்வைக்கிறார். உணர்ச்சியில் பட்டுக்கொள்வது என்பது நல்லது - கெட்டது, வருத்தம் - மகிழ்ச்சி, வாழ்க - ஒழிக, நம்மவர் - அயலவர் என்பன போன்ற இருமைகளில் ஏதேனும் ஒன்றில் மனச்சாய்வு கொள்வதன் விளைவு. சிக்கலான மனித இயல்பின் விசித்திரமான வெளிப்பாடுகளை எடை போட்டுத் தீர்ப்பு வழங்குவதில் உள்ள அபத்தத்தை உணர்ந்த மனம் இத்தகைய வெளிப்பாடுகளை மகிழ்ச்சியோ கசப்போ இன்றி முன்தீர்மானங்களின்றி அணுகும். இந்த அணுகுமுறை வெற்றி - தோல்வி, நன்மை - தீமை என்று எந்தக் கட்சியிலும் சேராமல் பற்றற்ற மனநிலையுடன் விலகி நிற்கவைக்கும். இந்தப் பற்றற்ற நிலை அசோகமித்திரனின் சித்தரிப்பில் வெளிப்படுவதை உணரலாம். வாழ்வனுபவங்கள் குறித்த பதற்றங்களைத் தணித்துப் புரிந்துணர்வை ஆழமாக்கும் அணுகுமுறை இது.

தாக்கம் செலுத்த வேண்டும் என்னும் மெனக்கெடல் அசோகமித்திரனிடத்தில் இருக் காது. ஆனால், அவர் கதை சொல்லும் விதம் இயல்பாகவே வாசகரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ‘கோலம்’, ‘முறைப்பெண்’, ‘திருப்பம்’, ‘வெளி’, ‘புலிக்கலைஞன்’, ‘காத்திருப்பு’ ‘மஞ்சள் கயிறு’, ‘பிரயாணம்’, ‘காட்சி’, ‘நடனத்திற்குப் பின்’, ‘விமோசனம்’, ‘யுக தர்மம்’, ‘வாழ்விலே ஒருமுறை’, ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’ முதலான பல கதைகள் வாசகரிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எத்தனை முறை படித்தாலும் தமது புத்துணர்வை இழக்காமல் ஒவ்வொரு முறையும் சிறந்த வாசக அனுபவத்தைத் தரக்கூடியவை.

அசோகமித்திரனின் கதை மனிதர்கள்

அசோகமித்திரனின் முக்கியக் கதாபாத் திரங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக, அனுதாபத்துக் குரியவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை விடவும் அத்தகைய மனிதர் களால் துன்பத்துக்கு ஆளாகிறவர்கள் அதிக மாகக் கவனப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அந்தத் துன்பங்களை உணர்ச்சிப் பிசுக்கு இல்லாமல் காட்டுகிறார். பாதிக்கப்பட்டவர் களின் கதைகளைக் கழிவிரக்கம் இல்லாமல் பேசுவதில் அசோகமித்திரனுக்கு நிகர் யாருமில்லை.

மனிதர்களின் இயல்புகளும் செயல்களும் பிறப்பு, சூழல், இயல்பு, பழக்கம், நிர்ப்பந்தம் எனப் பல காரணிகளைப் பொறுத்தவை. இவற்றைத் தனது அளவுகோல்களால் அசோகமித்திரன் அளப்பதில்லை. அதனால் தான் அவரது கதையுலகில் நாயகர்களோ எதிர்நாயகர்களோ இல்லை. எல்லோரும் அவரவருக்குச் சாத்தியப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள். எனவே, யாரும் மகிமைப்படுத்தப்படுவதில்லை; சிறுமைப்படுத்தப்படுவதும் இல்லை.

உண்மையின் தரிசனம் என்பது அசாதாரண மான சூழல்கள், தருணங்கள், முயற்சிகள் ஆகியவற்றோடு தொடர்புகொண்டதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அன்றாட வாழ்வின் சாதாரணத் தருணங்களே வாழ்வின் அடிப்படை உண்மையை நமக்குக் காட்டக்கூடியவை. அசோகமித்திரனின் கலை அந்த உண்மைகளைப் பார்க்க நமக்குக் கற்றுத்தருகிறது. எளிமையின் மொழியில் சமநிலை கொண்ட அணுகுமுறை கொண்ட அசோகமித்திரனின் கதைகள் என்றென்றும் வாசிக்கத்தக்கவையாக இருப்பதன் முக்கியமான காரணங்களில் ஒன்று இது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

SCROLL FOR NEXT