இலக்கியம்

செம்மொழி தமிழ் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

ஆர்.ஷபிமுன்னா

செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிராணப் முகர்ஜி கலந்து கொண்டு 2009-10 மற்றும் 2010-11 ஆகிய இரு கல்வி ஆண்டுகளுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதில் 2009-10 ஆம் கல்வி ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது. இதே ஆண்டுக்கான இளம் அறிஞருக்குரிய விருது முனைவர் டி. சுரேஷ், எஸ், கல்பனா, ஆர். சந்திரசேகரன், வாணி அறிவாளன் மற்றும் சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வெளிநாட்டில் செவ்வியல் தமிழை வளர்ப்பதற்காக பாடுபடுபவர்களுக்கான குறள் பீடம் விருது செக். குடியரசு நாட்டை சேர்ந்த முனைவர் ஜரோஸ்லாவ் வாசேக்குக்கு வழங்கப்பட்டது. இவர் சம்ஸ்கிருதத்திலும் நிபுணர்.

தொடர்ந்து, 2010-11 ஆம் கல்வி ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தமிழண்ணலுக்கு வழங்கப்பட்டது. இளம் அறிஞருக்கான விருது முனைவர் டி.சங்கய்யா, ஏ.ஜெயகுமார், ஏ.மணி, சி,சிதம்பரம் மற்றும் கே.சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. குறள்பீட விருது, இங்கிலாந்து நாட்டின் முனைவர் ரால்ஸ்தான் மார் என்ற தமிழ் அறிஞருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகள், செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு அமைப்பு, மனிதவளத் துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் தேர்வுக் குழு மூலம் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசிற்கு அனுப்புகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கான இந்த விருதுகள், அடுத்த ஆண்டின் முடிவிற்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால், மூன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக சேர்த்து வழங்கப்படுகிறது.

தாமதம் ஏன்?

தாமதத்துக்கான காரணங்கள் குறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது:

'2005-06 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுகள், கடந்த 2010-ல் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றாக சேர்த்து வழங்கப்பட்டது. தற்போது இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு ஒன்றாகச் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளுக்கான விருதுகள் பாக்கி உள்ளன. இதற்கு, விருதுகளின் முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குநர் முதல் அலுவலர்கள் வரை எவரையும் நிரந்தரமாக பணி அமர்த்தாமல் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்.'

'குறள் பீடத்திற்கான விருது வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களுக்கானது என்பதால் அவர்களது நாட்டு அரசுகளிடம் பேசி நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் தன் நிர்வாக விதிமுறைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதே பிரச்சனை, சினிமா மற்றும் கலாசாரத்துறையினர் அதிகமாகப் பெறும் பத்மபூஷண், பத்மவிபூஷண் மற்றும் பத்ம விருதுகளுக்கு உண்டாவதில்லை' என்கிறது தமிழறிஞர்கள் வட்டாரங்கள்.

இது குறித்து சென்னையிலிருந்து வந்திருந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் பூமா கூறியது: 'இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகள் பாக்கி உள்ளன. 2011-12 மற்றும் 2012-13 ஆண்டுகளுக்கான அந்த விருதுகளை அடுத்த 6 மாதங்களில் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தாமதிக்காமல் கொடுத்து விடுவோம்.' என்றார் நம்பிக்கையுடன்.

2009-10ம் கல்வி ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதை குடியரசுத்தலைவரிடம் இருந்து பெறும் ஐராவதம் மகாதேவன். அடுத்த படம்: 2010-11ம் கல்வி ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதைப் பெறும் தமிழண்ணல் பெரியகருப்பன்.

SCROLL FOR NEXT