‘மகனுக்கு மடல்’ எனும் இந்தப் புத்தகம் புதுக் கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா. ஜெயராமன் ஹாங்காங்கில் படிக்கும் தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்கள், ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதம் என்று ஐந்து கடிதங்களைக் கொண்டது. ‘உயர்கல்வி’ என்ற நீண்ட கடிதத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டிய நன்றி குறித்து இடம்பெற்றிருக்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை; குடும்ப வாழ்வில் உறவுகளைச் செம்மைப்படுத்திக்கொள்ள உதவுபவை.
இந்தக் கடிதத் தொகுப்பில் பல இடங்களில் அம்பேத்கரின் கூற்றுகளை ஜெயராமன் பயன்படுத்தியிருக்கிறார். ‘தீண்டத் தகாதவர்கள்' எனும் கூற்றுக்குள் அடங்கியிருக்கும் அவமானங்களையும் இழிவுகளையும், சமூகத்தில் நிகழ்ந்தேறிய சம்பவங்களையும் ஜெயராமன் நினைவூட்டுகிறார்.
சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளி நாடு ஓடுவது சம்பளத்துக்காக மட்டுமல்ல, சுய மரியாதைக்காகவும், தங்கள் ஆராய்ச்சிக்கான தளத்தைத் தேடியும்தான் என்ற உண்மையை ஜெயராமனின் ஆதங்கம் மூலம் நம்மால் உணர முடிகிறது. இந்தியாவில் ஒரு மனிதரின் அனைத்துத் திறமைகளும் சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியை ஜெயராமன் இந்தத் தொகுப்பில் முன்வைக்கிறார்.
இளைஞர்களிடையே சமூக விடுதலைக்கான வேட்கை இருப்பதைக் கண்டுணர்வது முக்கியம். அதை வளர்த்தெடுப்பதில் நமது பங்களிப்பின் அவசியத்தை இந்தக் கடிதங்கள் உணர்த்துகின்றன.
மகனுக்கு மடல்
மருத்துவர்.நா.ஜெயராமன்
அபெகா வெளியீடு, 832, கீழராஜ வீதி 2ம் தளம், புதுக்கோட்டை-622001
விலை-ரூ.80.