சங்கக் காலம் முதல் பக்தி இலக்கியக் காலம் வரை தமிழ் கவிதையில் இயங்கிய நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளும், உரைகளும் கொண்ட தொகுப்பு இது. அஞ்சியத்தின் மகள் நாகையார், ஆதிமந்தியார் தொடங்கி ஆண்டாள் வரை கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சாதாரண வாசகர்களும் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வகையில் எளிய மொழியில் இக்கவிதைகளின் உரை அமைந்திருப்பது சிறப்பு. சங்கக் காலத்தில் தனித்த மொழி, உயர் கவித்துவத்துடன் மனத்தடை இல்லாத பெண் மொழியை உருவாக்கிய கவிஞர்களின் வரிசை ஏன் அறுந்துபோனது என்ற கேள்வியும் இக்கவிதைகளைப் படிக்கும்போது எழுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் கவிதைகள் எழுதும் பெண்கள் பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்து சாதனைகளைச் செய்யும் வேளையில், இத்தொகுப்பு கவனம் பெற்றிருக்கிறது. கவிதைகள், உரை மட்டுமின்றி கவிஞர்களைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அன்பின் தேடலாகவும், பிரிவின் காத்திருத்தலாகவும் காலம் காலமாக மாறாமல் இருக்கும் பெண்மையின் வெளிப்பாடுகள் இக்கவிதைகள்.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…
தொகுப்பும் உரையும்: ந.முருகேசபாண்டியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 600 098
தொலைபேசி: 044- 26258410
விலை: ரூ.215/-