இலக்கியம்

தொடுகறி: கிளிண்டன் எழுதும் திரில்லர் நாவல்

செய்திப்பிரிவு

கிளிண்டன் எழுதும் திரில்லர் நாவல்

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேம்ஸ் பாட்டர்சனுடன் சேர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ‘தி ப்ரெசிடெண்ட் இஸ் மிஸ்ஸிங்’ என்ற நாவலை எழுதவுள்ளார். உலகின் மிகப் பெரிய அதிகார மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்குள் நடக்கும் கதை இது. பில் கிளிண்டனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நேரடியாகக் கிடைத்திருக்கும் அனுபவம் கூடுதலான சுவாரசியத்தைத் தரும் என்கிறார் ஜேம்ஸ் பாட்டர்சன். இந்த திரில்லர் நாவல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

சிட்னி சித்திரை திருவிழா

கடந்த ஆறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவரும் நிகழ்வு ‘சிட்னி சித்திரைத் திருவிழா’. இந்த விழாவுக்கு 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் இலக்கியவாதிகளை அழைத்து இங்கே கவுரவப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு, தமிழகத்திலிருந்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அழைக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கலாச்சாரத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு, மேடையில் நாற்காலிகள் ஏதுமின்றி நின்றபடியே (கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்) வாழ்த்திப் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்களாம்.

இலக்கியம் என்ன செய்ய முடியும்?

மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை (ஏப்ரல் 9) மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்திலுள்ள துலாகர் ஊர்வாசிகள் ரக் ஷா பந்தன் விழாவாகக் கொண்டாடி யுள்ளனர். சமய நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகை யில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்து முஸ்லிம் கலவரத்தால் கடும் பதற்றத்துக்கு ஆளாகியிருந்த ஊர் அது. வங்கத்தில் சமய நல்லுறவைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் தாகூர். அவர் பிறந்தநாளில் சமய நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. அரசியலால் இயலாததை இலக்கியம் சாதித்திருக்கிறது.

SCROLL FOR NEXT