தடம் பதித்த தமிழறிஞர்கள், முனைவர் இராம. குருநாதன், விலை: ரூ.120
விழிகள் பதிப்பகம், சென்னை-600041, 9444265152
சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும் சமகால இலக்கியத்தைத் தொடர்ந்து இன்றளவும் வாசித்து வருபவருமான இராம. குருநாதன் எழுதிய பத்துக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. வள்ளலாரும் பாரதியாரும், கவிமணியும் கவிதைப் பின்னணியும், மயிலை சீனி. வேங்கடசாமியின் இலக்கிய நோக்கு, கா. அப்பாத்துரையாரின் தமிழ்ப் பணி, மு.வ. வின் படைப்பில் காந்தியக் கருத்தியல் என ஒவ்வொரு கட்டுரையும் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கும் தமிழாய்ந்த மூத்த அறிஞர் பெருமக்களின் பங்களிப்பை மிகுந்த நன்றியோடு நினைவுகூர்வதாய் அமைந்துள்ளன.
கோமணம், சுப்ரபாரதி மணியன், விலை: ரூ.80
முன்னேற்றப் பதிப்பகம், சென்னை-600033, 9486732652
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் பதினைந்தாவது நாவல் இது. தனது படைப்புகளில் ஏதேனுமொரு சமூக பிரச்சினையை முன்வைத்து, அதுகுறித்த விவாதங்களைத் தூண்டும் நூலாசிரியர், இந்நாவலில் பழனிக்குப் பாதயாத்திரைச் செல்பவர்களின் அனுபவங்களினூடாக நிகழ்காலச் சம்பவங்களையும் நயம்படக் கோத்துத் தந்துள்ளார். ஆத்திகம், நாத்திகம் குறித்த வெளிப்படையான விவாதங்களின்றி, கடவுள் சார்ந்த மனித நம்பிக்கைகள், தொன்மக் கதைகள், கடவுள் வழிபாட்டுச் சடங்குகள் என அனைத்தையும் அப்படியே காட்சிப்படுத்தி, நம்மையே யோசிக்க வைக்கிறது இந்த ‘கோமணம்’.
தமிழகத்தின் மரபுக் கலைகள்! எழிலவன், விலை: ரூ.200
வெளியீடு: ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்
சென்னை 83, 9600123146
‘முந்திரிக்காட்டு முகவரிகள்’ என்னும் ஆய்வு நூல் வழியே வாசகர்களிடையே அறிமுகம் பெற்றிருப்பவர் எழிலவன். இவர் நமது மரபு சார்ந்த கலைகள் பற்றி ‘தமிழ் ஓசை’ நாளிதழில் எழுதிய தொடரே இந்நூலாகியுள்ளது. வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்த்துகலைகள், மட்பாண்டக் கலை, மரச்சிற்பக் கலை, பட்டு நெசவு உள்ளிட்ட கைவினைக் கலைகள் என்ற இரண்டு வகைகளை எடுத்துக்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட கலைகளை ஆவணப்படுத்தியுள்ளார். மரபுக் கலைகள் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள் கொண்ட கட்டுரைகள் இவை.
தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள், ந. முருகேசபாண்டியன், விலை ரூ. 80
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78, 044-65157525
உலகமயச் சூழலில் நம் பண்பாடு சிறிது சிறிதாக மறைந்துவிடுமோ என்னும் அச்ச உணர்வு மெல்லத் தலைதூக்கியபோது தமிழ்ப் படைப்பாளிகள் பண்பாடு சார்ந்த புரிதலை உள்ளடக்கிய கருத்துகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் பதிவிட்டார்கள். அப்படி ஒரு நோக்கத்தில் ந. முருகேச பாண்டியன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இப்போது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் என்னும் நூலாகியிருக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்பது தோளில் அணியும் துண்டுபோன்ற பெருமிதத்தின் அடையாளம் அல்ல; அது தமிழர்களின் சுவாசம் போன்றது என்பதை நுட்பமாகச் சுட்டும் கட்டுரைகள் இவை.
மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா
விலை: ரூ.120, சாகித்திய அகாதெமி, சென்னை-600018, 044-24354815
கவிஞர், நாவலாசிரியர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு. தற்கால கன்னட சிறுகதை இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் நூலாசிரியரின் இச்சிறுகதைகளில் வெளிப்படும் மனிதர்களின் இயல்பான போக்குகளும், மெல்லிய அங்கதமும் ரசிக்க வைக்கின்றன. இந்த கன்னடக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவரும் ஒரு எழுத்தாளர் என்பதால், கதையின் ஜீவன் வாசிப்பு நெருடலின்றி வெளிப்பட்டிருக்கிறது.