இலக்கியம்

கடவுளின் நாக்கு 29: உப்பும் குற்றமும்

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெண் அதிகாரி கைது என்ற செய்தி ஒன்றை நாளிதழில் வாசித்தேன். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது தொடர் புகார் வந்து கொண்டிருந்ததாம். இன்று லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்களே கிடையாது. உண்மையில் இந்தக் கைது சம்பவம் ஒரு நாடகம்தானா? அந்த அலுவலகத்தில் அன்று ஒருநாள் மற்ற ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்திருப்பார்கள். மறுநாள் கைநீட்டி காசு வாங்கத் தயங்க மாட்டார்கள்தானே!

ஒருநாளில் இது போல ஆயிரம் குற்றச்செய்திகள் நாளிதழில் வெளி யாகின்றன. ஆனால் இந்த ஒரு செய்தி என்னை ஏன் துன்புறுத்து கிறது? அந்தப் பெண்ணின் புகைப் படம்தான் காரணம்.

சாந்தமான முகம். அகலமான குங்குமப் பொட்டு. ஓய்வு பெறப் போகும் வயதில் உள்ளவர் என்பது புகைப்படத்தைக் காணும்போதே தெரிகிறது.

அந்தப் பெண்மணி சிறையில் அடைக்கப்படுவாரா? எத்தனை ஆண்டுகள் நீதிமன்றத்துக்கு அவர் அலைய வேண்டும்? அல்லது மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங் கத் தெரியாத அப்பாவி என தன்னை சுயமதிப்பீடு செய்துகொள்வாரா? இவரது கணவர், மகன், மகள், மற்றும் உறவினர்கள் இந்த கைது செய்யப்பட்டது பற்றி என்ன நினைப்பார்கள்? இவருடைய கைது, இவரைப் போல லஞ்சம் வாங்கும் ஒருவருக்காவது அச்சத்தை உருவாக்குமா?

எழுத்தாளன் என்பதால் இதுபோல எனக்கு ஆயிரம் யோசனைகள் தோன்றுகின்றன. வழக்கறிஞர் நண்பரிடம் இதைப் பற்றி நான் ஆதங்கப்பட்டபோது, அவர் சொன்னார்:

‘‘காசைக் கொடுத்து கேஸை ஒண்ணும் இல்லாமல் பண்ணிடு வாங்க. ரேஷன் கடையில் ஆரம் பித்து ராணுவத் தளவாடம் வரைக் கும் லஞ்சம். எவ்வளவு கேட்டாலும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, தன்னுடைய வேலையை முடிக்கணும்னுதான் மக்களும் நினைக்கிறாங்க. ஆறு வருஷமா அந்த அம்மா மேல புகார் போய்க்கொண்டு இருந்த தென்றால், அவங்க எவ்வளவு லஞ்சம் வாங்கியிருப்பாங்க? அந்தப் பணத்தை எல்லாம் இப்போ பறிமுதல் பண்ணிடுவாங்களா? இதெல்லாம் ஒரு டிராமா!”

அவர் சொன்னதுபோல இது ஒன்றுமில்லாத விஷயம்தானா?

தவறு செய்யப் பழகுகிறவன், அதை நியாயப்படுத்த எவ்வளவு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொள்கிறான்? தான் நிரபராதி, தன்னைவிட மோசமானவர்கள் அதிகமிருக்கிறார்கள் என்று வெளியே சுட்டுவிரலை நீட்டிக் காட்டுகிறான்.

தங்களின் சுயலாபத்துக்காக அப்பாவி மக்கள் பாதிக்கப்படு கிறார்களே என்கிற குற்றவுணர்வு ஏன் எவருக்கும் இருப்பதில்லை? நீதிமொழிகள், அறவுரைகளை வெறும் வேடிக்கை செய்திகளாகத் தான் சமூகம் கருதுகிறதா? ஆறுலட்சம் லஞ்சம் வாங்கியவர் மாட்டிக் கொள்வதும் பல லட்சம் கோடிகள் லஞ்சம் பெற்றவர்கள் அதிகாரத்துடன் கம்பீரமாக வலம் வருவதும்தான் சமநீதியா?

இது புத்தர் சொன்ன கதை: ஒரு முட்டாள் நண்பன் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றான். உப்பும் சுவை யும் குறைவான உணவை எப்படி சாப்பிடுவது என நண்பனிடம் முட்டாள் கோபித்துக்கொண்டான். நண்பருடைய மனைவி உப்பை கொண்டு வந்து தர, தேவையான உப்பை உணவில் சேர்த்துக் கொண்டு முட்டாள் சாப்பிடத் தொடங்கினான். ‘துளி உப்பை சேர்த்ததுமே உணவு இவ்வளவு ருசியாக இருக்கிறதே. உப்பை மட்டும் தனியாக சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்’ என்றெண்ணி… இலை நிறைய உப்பைக் கொட்டச் சொன்னான். இலை நிறைய உப்பு பரிமாறப் பட்டது.

அவன் கை நிறைய உப்பை அள்ளி அள்ளி உப்பைத் தின்று, முடிவில் சுயநினைவின்றி மயங்கி விழுந்தான். இப்படித்தான் தவறு செய்கிறவர்கள், தவறின் ருசிக்கு மயங்கி மெல்ல தன்னையே இழந்துவிடுகிறார்கள்.

புத்தர் சொன்ன கதையில் வருபவன் முட்டாள். ஆகவே, அவனுக்கு உப்பைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால், லஞ்சம் வாங்குபவர்கள் அறிந்தே தவறு செய்பவர்கள்.

நம் காலம் தீமையின் யுகம். எல்லா தீமைகளும் பொதுவெளி யில் களியாட்டம் புரிகின்றன. தீமை யின் அலங்காரமும் வசீகரமும் அனைவரையும் ஈர்க்கின்றன. ஆயி ரம் வேஷங்கள் புனைந்தாலும் தீமை ஒருபோதும் நன்மையாகி விடாதே. எழுத்தாளர்கள் எப் போதும் நன்மையின் குரலையே ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சந்தைமயமாகிப் போன உலகில் இவை எல்லாம் பரிகசிக்கப்படக்கூடும். ஆனால் நன்மையின் குரலை ஒலிக்கும் கலைஞர்கள் வந்துகொண்டே தான் இருப்பார்கள்.

நிறைய வீடுகளில் இன்று புத்தர் சிலைகள் அலங்காரப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதை காண்கி றேன். புத்தர் வெறும் அலங்காரப் பொருள் இல்லை. அவரது சிந்த னைகள் நமக்குள் பெரும் மாற் றத்தை உருவாக்கக் கூடியவை.

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

SCROLL FOR NEXT