ஒரு சமூகத்தின் பண்பாடும் வரலாறும் பெரிதும் மொழியின் வழியாகவே பதிவாகின்றன. ஒரு காலகட்டத்தை அடுத்த காலகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஊடகம் மொழி. இந்த மொழியையும் அதன் பல்வேறு கூறுகளையும் செழுமைப்படுத்தித் தருவது எழுத்தாளர்களின் முக்கியமான பங்களிப்பு.
அறிவியல், தொழில்நுட்பம், திரைப்படம், உற்பத்தி முதலான துறைகளில் பங்களிப்பு செலுத்துவதைப் போலத்தான் மொழிக்கான பங்களிப்பும். ஆனால், பிற துறைகளோடு ஒப்பிடும்போது மொழிக் கலைஞர்களின் நிலை தமிழகத்தில் என்ன? அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அவர்கள் ஆற்றும் பணியின் மூலம் உதவி கிடைக்கிறதா? தமிழைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகளுக்கு உதட்டைப் பிதுக்கும் நிலைதான் இன்றளவிலும் உள்ளது. அரசு, பல்கலைக்கழகங்கள், பொது அமைப்புகள் ஆகியவை எழுத்தாளர்களை அங்கீகரித்து கவுரவிப்பது இன்னமும் பொது வழக்கத்தில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஒரு படைப்பாளிக்கான வாழ்வாதாரத்தை அவரது எழுத்து தரும் என்பதற்கான உத்தரவாதம் இன்றளவிலும் இல்லை.
அரசும் பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளும் செய்யத் தவறும் இந்தப் பணியைத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் தங்களால் இயன்றவரை செய்துவருகிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சனின் 55 ஆண்டு கால எழுத்துலகப் பங்களிப்பை அங்கீகரித்து கவுரவப்படுத்தும் முயற்சியைத் தனிநபர்கள் மேற்கொள்கிறார்கள். கவிஞர் சுகுமாரனுக்கு 60 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி அவருக்கான கவுரவத்தைக் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை அளித்தது. கவிஞர் தேவதச்சனின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கை உயிர்மை பதிப்பகம் முன்னின்று நடத்துகிறது. ஆனால், இப்படிப்பட்ட அங்கீகாரங்களோ கவுரவங்களோ இல்லாமல் மடிந்துபோன தமிழ்ப் படைப்பாளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இவை ஆறுதல் தருகின்றன.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தனிநபர்களும் சிறிய அமைப்புகளும் மட்டுமே இதையெல்லாம் செய்துகொண்டிருக்க வேண்டும்? மொழிக்குப் பங்களிக்கும் கலைஞர்கள் கவுரவமாக வாழ வகை செய்யும் முயற்சிகளை அரசும் அரசுசார் அமைப்புகளும் ஏன் முன்னெடுக்கக் கூடாது? பணத்தில் புரளும் அரசியல் கட்சிகள் தங்களது செயல்திட்டத்தில் எழுத்தாளர்களைக் கவுரவிப்பதையும் ஒரு பகுதியாக ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? பரவலாக நன்கு அறியப்பட்ட, சாகித்ய அகாடமி போன்ற தேசிய அளவிலான விருதுகளைப் பெற்ற பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களையே அங்கீகரிக்க அரசுசார் அமைப்புகளும் கட்சிகளும் முன்வரவில்லை என்றால், பரவலாக அறியப்படாத எழுத்தாளர்களின் நிலை என்ன?
இன்று தமிழ் குறித்து அரசியல் கட்சிகள் முன்வைக்கும் பெருமிதமெல்லாம் முற்காலப் படைப்பாளிகள் உருவாக்கியது என்பதைக் கருத்தில் கொண்டால் இன்றைய படைப்பாளிகளை அரசியல் கட்சிகள் கொண்டாட வேண்டியதன் அவசியம் புரியும். இன்னும் எத்தனை காலம்தான் எழுத்தாளர்கள் சத்திமுத்தப் புலவர் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்!