புத்தகக்காட்சிக்காக நிரந்தரமாக ஒரு இடம் வேண்டும் என்ற பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் பபாசி மாநில அரசை அணுகி, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தப் புத்தகக்காட்சியில் வழக்கமான பிரச்சினையான கழிப்பிட வசதி இந்த ஆண்டும் தொடர்ந்தது. அடுத்த முறை சற்று முன்கூட்டியே இதற்கென்று திட்டமிட்டு மேலான நவீன வசதிகளை மேற்கொள்ளலாமே!
2015-ல் நடந்த புத்தகக் காட்சியில் வாசகர்களின் போக்குவரத்து வசதிக்காக ‘நம்ம ஆட்டோ’ ஏற்பாடு செய்துதரப்பட்டிருந்தது. இந்த முறை அது இல்லை. விளைவாக, அதிக அளவு ஆட்டோ கட்டணத்தால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். அடுத்த முறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். காபி ரூ. 30, டீ ரூ. 20 என்பதெல்லாம் அநியாயம்!
வழக்கமாக அகர வரிசையில் அச்சிட்டுத் தரப்படும் அரங்கு வழிகாட்டி, இப்போது அகர வரிசையில் இல்லாததால் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான அரங்குகளைக் கண்டுபிடிப்பதில் திணறிப்போனார்கள். கணிசமான வாசகர்களுக்கு அரங்கு வழிகாட்டிச் செயலி பரிச்சயமாகியிருக்கவில்லை. அடுத்த முறை அகர வரிசையில் அரங்கு வழிகாட்டி கொடுத்தால் நன்று!
எல்லா அரங்குகளும் ஸ்வைப்பிங் இயந்திரத்தின் உதவியை நாடியிருந்த சூழலில், அரங்கு வளாகத்துக்குள் சில இடங்களில் நெட்வொர்க் இல்லாததால் கணிசமாகப் புத்தக விற்பனை பாதிக்கப்பட்டதாகப் பலரும் வருத்தம் தெரிவித்தார்கள். பணமில்லாப் பரிவர்த்தனை அதிகரித்திருக்கும் சூழலில், அடுத்த முறை அவசியம் களையப் பட வேண்டிய பிரச்சினை இது!