‘காமதேனு’ வார இதழுடன் இணைந்து கோலம் அறக்கட்டளை நடத்திய அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.பாஸ்கரின் ‘நதி போகும் கூழாங்கல்’, டி.சீனிவாசனின் ’கூட்டுக்குடும்பம்’, பிரவீன் குமாரின் ‘மேரி பிஸ்கட்டும் மங்களம் ஆச்சியும்’ சிறுகதைகள் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. இது தவிர, பிற இதழ்களில் வெளியான சிறுகதைப் பிரிவில் விழி.பா.இதயவேந்தன், த.ராம்தங்கம், எஸ்.கோபாலகிருஷ்ணன் வென்றிருக்கிறார்கள். அசோகமித்திரனின் பிறந்தநாளான இன்று சென்னை மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி ஹாலில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை
மூத்த பத்திரிகையாளர் சாவியின் குருகுலத்தில் பயின்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரவிபிரகாஷ், 25 ஆண்டுகளில் தான் எழுதிய 200-க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பை 2000 வாக்கில் வெளியிட முடிவெடுத்தார். அந்தக் கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. தலைப்பு: ‘இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை’. தொகுப்பிலுள்ள 50 கதைகளுக்கும் வெவ்வேறு துறையைச் சேர்ந்த ஆளுமைகள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். 50 அணிந்துரைகளோடு வெளிவந்த முதல் தமிழ்ப் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.
நூலைப் பெற: 98409 24911
திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா
காலாண்டு விடுமுறையைப் பயனுள்ளதாக்கும் விதமாக மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு நெல்லை புத்தகத் திருவிழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள செல்வி மஹாலில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
கு.அழகிரிசாமியின் நினைவாக மாதந்தோறும் ‘இலக்கிய அமுதம்’
கு.அழகிரிசாமியின் நினைவாக இன்று மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மகாலெட்சுமி நல மன்றத்தில் ‘இலக்கிய அமுதம்’ இலக்கிய அமைப்பை கு.அழகிரிசாமியின் புதல்வர்கள் இணைந்து தொடங்குகிறார்கள். இலக்கிய உரை, இசை தொடர்பான நிகழ்வுகளை மாதந்தோறும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இன்றைய தொடக்க விழாவில் ‘இலக்கியச் சிந்தனை’ ப.லட்சுமணன் தலைமையேற்கிறார். கு.அழகிரிசாமியின் எழுத்துகள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்