பார்வை தொலைத்தவர்கள்
யோசே சரமாகோ
தமிழில்:
எஸ்.சங்கரநாராயணன் ,
விலை: ரூ.295.
வெளியீடு :
பாரதி புத்தகாலயம்,
சென்னை – 600 018.
தொடர்புக்கு:
044-24332424
பிறவியிலேயே பார்வையற்றவர்களின் தினசரி எப்படி இருக்கும்? வாழ்வில் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் பெரும்பாலானோர் யோசிப்பதே இல்லை. ஆனால், பார்வை என்ற ஒரு புலனைத் தொலைத்தவர்களின் நோக்கம் நிச்சயம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும், அது தொலைத்த பார்வையைத் திரும்பப் பெறுவதென்பதேயாகும்.
நீங்கள் காரோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சிக்னலில் சிவப்பு விளக்கெரிய காரை நிறுத்திவிட்டுப் பச்சை விளக்குக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். கண் மூடித் திறக்கும்போது உங்கள் முன் ஒரு கடல், வெண்கடல். கண்களை இறுக்கமாக மூடினால் தோன்றும் அடர்ந்த இருளுக்கு எதிர்ப்பதமான ஒரு வெண்மை, தூய வெண்மை. உங்களால் சாலையைக் காண முடியவில்லை, முன்னால் நின்றுகொண்டிருக்கும் வாகனத்தை, சிவப்பு-பச்சை விளக்கை, எதையும் காண முடியவில்லை. உங்கள் பார்வைத் திறன் இல்லாமலாகிறது. அப்போது எப்படி உணர்வீர்கள்? நீங்கள் பார்வையை இழந்துவிட்டதை உணர்கிறீர்கள். மருத்துவரிடம் செல்கிறீர்கள். அடுத்தடுத்த நாட்களில் அந்த மருத்துவரும், உங்களைச் சுற்றி இருப்பவர்களும் அனைவருமே பார்வை இழக்கிறார்கள். இந்த ஒரு சூழலில் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? ஒருவேளை உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் பார்வை இழந்து உங்களால் மட்டும் காண முடிந்தால்? அதுதான் யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ நாவலின் கதை.
பார்வையைத் தொலைக்கும் அனைவரும் அரசாங்கத்தால் ஒரு மனநலக் காப்பகத்தினுள் அடைக்கப்படுகிறார்கள். ஒருபுறம் ஏற்கெனவே பார்வை இழந்தவர்கள், மறுபுறம் பார்வை இழப்புக்கான சாத்தியங்கள் கொண்டவர்கள். நாட்கள் செல்லச் செல்ல அனைவருமே பார்வை இழக்கின்றனர். இறுதியாக, பார்வையிழந்து அங்கு வந்து சேரும் ஒரு குழு பொறுக்கிகள் மற்றவர்களுக்கான உணவைப் பறித்துக்கொண்டு அதற்கு ஈடாகப் பணத்தையும் பெண்களையும் கேட்கின்றனர். பார்வை இழந்தபோதும் கூட சிலர் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழாக வைத்திருக்க நினைத்திருப்பது சமகால மனித இனத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையும் குரூரத்தையும் வெளிச்சப்படுத்துகிறது.
சரமாகோ இந்த நாவலில் யாரைக் குறிப்பிடவும் அவர்களின் பெயர்களை உபயோகிக்கவில்லை. ‘மருத்துவரின் மனைவி’, ‘மருத்துவர்’ என்பதுபோல்தான் ஒவ்வொருவரையும் பற்றி பெயரால் குறிப்பிடுகிறார். பார்வை பறிபோன பின்னரும் ஒரு பெண்ணை ‘கருப்புக் கண்ணாடி அணிந்த பெண்’ என்று குறிப்பிடுவதெல்லாம் அற்புதப் பகடி. இப்படிப் பெயர்களைக் குறிப்பிடாததன் மூலம் கதையில் வரும் ஒவ்வொருவரின் பிரச்சினையையும் ஒரு சமூகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக உணரலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் இந்தக் கதையை அப்படியே சிறுபான்மை இனக்கூட்டங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். சிறுபான்மையினராக இருப்பவர்களை அரசு எப்படிப் பார்க்கிறது, அவர்களுக்குள்ளேயே ஏற்படும் பிளவுகள் என இந்தக் கதை அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது.
ஒருவழியாக மனநலக் காப்பகத்துக்கு வெளியே பாதுகாப்புக்கு நிற்கும் படைவீரர்கள் யாரும் இல்லை என்று அறிந்துகொண்ட பின் மனநலக் காப்பகத்திலிருந்து அனைவரும் தப்பித்து வெளியேறியதும்தான் அந்த ஊரில் அனைவருமே பார்வை இழந்ததை அறிகிறார்கள். இன்னும் பார்வை இழக்காதிருக்கும் ஒரே நபரான மருத்துவரின் மனைவி அவளுடனிருக்கும் அனைவரையும் ஓரிடத்தில் தங்க வைத்துவிட்டு, உணவு தேடச் செல்கிறாள். வழியில் அவள் காணும் மனிதர்களும் காட்சிகளும் நிச்சயம் வாசிப்பவர்களின் மன உறுதியை அசைத்துப் பார்க்க வல்லவை. இந்த நாவல் நிச்சயம் மெல்லிய மனம் படைத்தவர்களுக்கானது அல்ல.
இந்த நாவலில் மையம் அல்லது மொத்த சாரமும் குவியும் ஓர் இடம் பார்வை அல்லது பார்வை இழப்பு. அதற்குப் பிறகு வழியேதும் இல்லை என்று ஒரு முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்தப்படும்போது மனிதர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களிடமிருந்து எப்படிப்பட்ட அதீதங்கள், குரூரங்களெல்லாம் வெளிப்படும் என்பதன் ஆவணம் இந்த நாவல். கூடவே, மனித இனம் இன்னும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்ற சிறு வெளிச்சமாக மருத்துவரின் மனைவி பாத்திரத்தை நாம் கருதலாம்.
இந்த நாவல் 2009-ல் ஃபெர்ணாண்டஸ் மீரலஸ் இயக்கத்தில் திரைப்படமாகிக் கலவையான வரவேற்பைப் பெற்றது. தமிழில் இந்த நாவலை எஸ்.சங்கரநாராயணன் மொழிபெயர்த்திருக்கிறார்.