இலக்கியம்

பேயோன்: புத்தகக் காட்சிக்கு எனது டாப்- 10

செய்திப்பிரிவு

பேயோன். யாருக்கும் முகம் காட்டாத எழுத்தாளர். பேயோன் எழுத்துகளுக்கு ஆதாரமான உலகம் மெய்யானது அல்ல என்றாலும், அதில் மறைந்திருக்கும் முகங்கள் நிஜ உலகில் உலவக்கூடியவை; பகடியின் மூலம் கூர்மையான சமூக விமர்சனங்களை முன்வைக்கும் பேயோன், புத்தகக் காட்சியை ஒட்டி எழுதிய கட்டுரை இது.

1. அல் கய்தா: கடந்து வந்த பாதையும் செய்ய வேண்டிய மாற்றங்களும்

- அடால்ஃப் சாவர்க்கர், அல் அத்வானி பதிப்பகம்,

விலை ரூ. 108

அல் கய்தாவின் சாதனைகள், அதன் ‘உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி' கருத்தாக்கம், இந்து மக்கள் கட்சியின் ‘இந்து தேசம்' கருத்தாக்கம், அல் கய்தாவுக்கு என்ன மாற்றங்கள் தேவை போன்றவற்றை விசயங்களை இந்நூல் விவாதிக்கிறது.

2. ஹிட்லரின் ஜெர்மனி: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

கபல்ஸ்தாசன், அடல் கய்தா பதிப்பகம், ரூ. 151

ஹிட்லரின் ஜெர்மனியுடன் ஒப்பிட்டு, அது எப்படி இந்தியா வுக்குச் சிறந்த முன்மாதிரி என்பதை ரிக் வேதம், கந்த சஷ்டிக் கவசம், தெனாலிராமன் கதைகள் போன்ற நூல்களைச் சுட்டி ஆதாரபூர்வமாக எழுதியிருக்கிறார் கபல்ஸ்தாசன்.

3. அந்த அதுவும் இந்த இதுவும்: அபுனைவு நூற்தலைப்புகளும் உம்மைத் தொகைப் பயன்பாடும்

முனைவர் இரா. மாணிக்கம், புதுமை பதிப்பகம், ரூ. 370

உம்மைத் தொகைப் பயன்பாட்டின் பரிணாம வளர்ச்சி, உம்மைத் தொகைப் பயன்பாடும் தமிழ்ப் பதிப்புலகின் நாலுகால் பாய்ச்சலும், உம்மைத் தொகைப் பயன்பாட்டின் முன் உள்ள சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் குறிப்பிடத்தக்கவை.

4. நிகழ்வுகள் 2013

தமிழ் மனோரமா பதிப்பகம், ரூ. 100

கிண்டி மொபைல் போன் கடையில் துணிகரத் திருட்டு முதல் ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டது வரை 2,013 முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

5. ஊருணிப் பூச்சி

அமர்ப்ரீத் காத்தமுத்து, பொன்வேய் பப்ளிஷர்ஸ், ரூ. 80

சொற்களின் எல்லைகளைக் கறாராக மீறும் கவிதைகள்.

6. வெறும் பூச்சி

ரோஷன் கருணகிழங்கே, ஐம்பொன் பப்ளிஷர்ஸ், ரூ. 80

‘ஊருணிப் பூச்சி’ போன்றது, ஆனால் வேறு ஆள் எழுதியது.

7. அஜக்தா, அலேக்தா!

முகேஷ் மாதவன், காவியம் புக்ஸ், ரூ. 1,100

சந்தைப்படுத்தலின் அடுத்த கட்டத்துக்குத் தாய்த் தமிழைக் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது இந்த சூப்பர்ஹிட் சிறுகதைத் தொகுப்பு.

8. குறிப்பிடத்தக்க சமூகத் தீமைகள்

ஃபில்லிப் கால்லின்ஸ், தமிழில்: சு. வைத்தியநாதன்,

சுவை வெளியீடு, ரூ. 120

பெரிய சமூகத் தீமைகளை எதிர்கொள்ளச் சற்றுச் சிறிய சமூகத் தீமைகளைக் கொண்டாடக் கோருகிறார் ஆசிரியர்.

9. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்

ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235

தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியினுடைய இந்நாவலை உளவியல் திரில்லராகப் படிக்கலாம்.

10. தேர்ந்தெடுத்த படைப்புகள்

பேயோன், ஆழி பதிப்பகம், விலை பின்னர் அறிவிக்கப்படும்

நம்முடைய புத்தகம்தான். நன்றாக இருக்கும்.

தொடர்புக்கு: writerpayon@gmail.com

SCROLL FOR NEXT