இலக்கியம்

அரசன் முகம் கொண்ட நாணயம்

செய்திப்பிரிவு

தென் இந்திய நாணயவியல் கழகத்தின் தலைவரான டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு சமீபத்தில் கிடைத்த, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டு நாணயம் குறித்து விவரிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் நாணயங்கள் விற்பவரிடமிருந்து ஒரு சதுர வடிவ செப்புக்காசை வாங்கினேன். அது அமராவதி ஆற்றுப்படுகையில் எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னாலும், நான் வைகை அல்லது தாமிரபரணி பகுதியைச் சேர்ந்தது என்று கருதுகிறேன். அந்த நாணயத்தின் எடை 6.7 கிராம். 1.7 சென்டிமீட்டர் செ.மீ நீளமும், 1.9 சென்டிமீட்டர் அகலமும் உடையது.

அந்த நாணயத்தின் மேல் படிந்திருந்த கசடை நீக்கவே பல நாள்கள் ஆனது. அந்த நாணயத்தின் முகப்புப் பகுதியைக் கவனமாகச் சுத்தம் செய்த பிறகு, ஒரு மனிதத் தலை பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அது நாணயத்தின் வலது பக்கம் கீழ்முனையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த உருவம் ஒரு அரசனுடையதைப் போல இருந்தது. அந்த உருவம் அணிந்திருக்கும் கிரீடத்தின் பின்புறத்திலிருந்து வேலைப்பாடுகளுடன் கூடி ரிப்பன்கள் வெளித் தெரிகின்றன.

அரசனுக்கு கூர்மையான மூக்கு. உருவம் பொறிக்கப்பட்டிருப்பதற்கு மேலே, செழியன் என்று தமிழ்-பிராமியில் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து மிகவும் மெலிவாக இருப்பதால், எழுத்து வடிவங்களைக் கூர்ந்து கவனித்த பின்னரே படிக்க முடிந்தது.

புறநானூறில் உள்ள ஆறு பாடல்களில் செழியனின் பெயர் பதிவாகியுள்ளது. இந்த நாணயத்தில் உள்ள தமிழ்-பிராமி எழுத்து வடிவம் ‘மாங்குளம் குகைக் கல்வெட்டெழுத்துகளை’ ஒத்திருக்கின்றன. மாங்குளம் மதுரை மாவட்டத்தில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டு கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

நாணயத்தின் பின்பகுதியில் உள்ள குளத்தின் சின்னமும், மீன்களும் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயங்களிலும் உள்ளன. இந்தச் சாட்சியங்களைக் கொண்டு, இந்த நாணயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்க முடிகிறது.

SCROLL FOR NEXT