இலக்கியம்

ந.முத்துசாமி: மாயச் சுழிப்பும் மந்திர நடையும்

சி.மோகன்

ந.முத்துசாமி தன் படைப்புலகப் பிரவேசத்தின் தொடக்கத்தில் சிறுகதை எழுத்தாளராகத்தான் வெளிப்பட்டார். 1966-ல் ‘எழுத்து’ இதழில் இவரது முதல் சிறுகதை ‘யார் துணை’ வெளியானது. இலக்கிய வாழ்வின் தொடக்க காலத்தில் சி.சு.செல்லப்பாவைத் தன் ஆசானாக வரித்துக்கொண்டு அவரது வழித்தடத்தில் பயணித்தார். முத்துசாமிக்கு ஒருவர் மீது ஆகர்ஷிப்பு ஏற்பட்டுவிட்டால் அது உணர்ச்சிவசப்பட்ட பரவச மனநிலையில் அவரை இருத்திவிடும்.

சிறு பிராய புஞ்சை கிராமத்து வாழ்வின் நினைவோடையிலிருந்து இவரது கதைகள் உருவாகின. மனித மனச் சலனங்களின் சுழிப்புகளுக்கேற்பச் சுழித்தோடும் மாயப் புனைவு மொழியையும் மந்திர நடையையும் கைப்பற்றிய அசாதாரணமான படைப்பாளுமை இவர். தன் கதைகள் பற்றி, “உட்சலனங்களாலேயே ஆட்பட்டு, வெளி மெளனத்தை மேற்கொண்டவை. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டப்பட்டிருக்கின்றன” என்கிறார். இவரது இந்த உட்சலனப் புனைவு மொழிதான் தமிழ்ச் சிறுகதையின் வளமான பிராந்தியத்தில் இவருக்கெனத் தனித்துவமான இடத்தை அமைத்துக் கொடுத்தது.

1974 வரை ‘எழுத்து’, ‘நடை’, ‘கசடதபற’, ‘ஞானரதம்’, ‘கணையாழி’ ஆகிய சிற்றிதழ்களில் கதைகள் எழுதிய முத்துசாமி, பின்னர் கூத்து, தியேட்டர் எனப் புதிய கலை எழுச்சிக்கு ஆட்பட்டு நவீன நாடகப் பனுவல்களைப் படைப்பதில் முழு கவனம் செலுத்தினார். 30 ஆண்டுக் கால இடைவெளிக்குப் பின்னர், 2004-ல் மீண்டும் சிறுகதைகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

அவரது முதல் கட்ட எட்டாண்டுக் காலச் சிறுகதைப் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை 1984-ல் ‘நீர்மை’ என்ற தலைப்பில் ‘க்ரியா’ வெளியிட்டது. இரண்டாம் கட்டச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளும், ‘நீர்மை’ தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுமாக 21 கதைகள் அடங்கிய தொகுப்பு, ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ என்ற தலைப்பில் 2009-ல் ‘க்ரியா’ வெளியீடாக வந்தது. (‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ தொகுப்பு டேவிட் சுல்மன் மற்றும் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ‘Bullocks from the West’ என ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.)

அவரது எந்தவொரு கதையும் சோடைபோனதில்லை. அவரது சிறுகதைக் கலை மனம் அப்படி. சிறுகதைப் படைப்பாக்கப் பயணத்தில் சில உச்சங்களை அநாயசமாக அடைந்திருக்கிறார். இவ்விரு தொகுப்புகளிலும் இடம்பெறாத கதைகள் இன்னமும் புத்தக வடிவம் பெறாது இருந்துகொண்டிருக்கின்றன.

‘நீர்மை’ தொகுப்பு உருவானபோது நான் ‘க்ரியா’வில்தான் பணியில் இருந்தேன். அத்தொகுப்புக்கு முத்துசாமி எழுதிய முன்னுரை அபாரமானது. தன் படைப்புலகம் பற்றியும், கதைகள் உருவான விதம் பற்றியும், தன் படைப்பு மன அமைப்பு பற்றியும், ஒரு கதையை எழுதிச்செல்லும் விதம் பற்றியும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரை அது. இப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், முத்துசாமியின் மூத்த மகனும் ஓவியருமான நடேஷ், முன்னட்டைக்கு வரைந்த முத்துசாமியின் உருவ ஓவியம். ரஷ்ய மறைஞானத் தத்துவ மேதையான குர்ஜீப் சாயலும், அதேசமயம் முத்துசாமியின் தத்ரூபமும் முயங்கிய ஒரு மாயத்தை அதில் நடேஷ் நிகழ்த்தியிருப்பார். குர்ஜீப்பின் மறைஞான சிந்தனைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் முத்துசாமி.

அவரது பெரும்பாலான கதைகளின் களனாக அவரது சிறு பிராயத்தை வடிவமைத்த புஞ்சை கிராமமே இருக்கிறது. “புஞ்சையில்லாமல் நானில்லை. என்னுடைய ஆளுமை புஞ்சையில் தயாரிக்கப்பட்டது. என்னுடைய நனவிலி மனதில் புஞ்சையின் பாதிப்புகள் புதைந்து கிடக்கின்றன. நான் எழுதுவதற்கு புஞ்சைதான் காரணம்” என்கிறார் முத்துசாமி. புஞ்சை கிராமத்து அக்ரஹாரத்து மனிதர்கள் மீது வெறுப்பும், ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீது மிகுந்த அனுசரணையும் கொண்ட மனம் இவருடையது. இளம் வயதில் திராவிட இயக்கச் சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டவர். அவரது முரட்டு மீசைக்கு இந்தப் புஞ்சை மனம்தான் காரணம். சென்னையில் தன் குடும்பத்தைத் தொடக்கத்தில் திருவல்லிக்கேணி மீனவர் குப்பத்தில் அமைத்துக்கொண்டதும் அதன் குணம்தான். அவரது மகன்கள் நடேஷும் ரவியும் மீனவச் சிறுவர்களுடன் விளையாடியும் உறவாடியும் வளர்ந்தவர்கள்.

ந.முத்துசாமியின் கலை ஆளுமைக்குரிய அங்கீகாரமென்பது அவரது ‘கூத்துப்பட்டறை’ இயக்கம் மூலமாகவும் அவர் உருவாக்கிய நாடகப் பனுவல்கள் மூலமாகவுமே கிட்டியது. 1966-ல் சிறுகதைப் படைப்பாளியாக ‘எழுத்து’ இதழ் மூலம் வெளிப்பட்ட முத்துசாமி, தன் படைப்புலகப் பிரவேசத்தின் தொடக்க கட்டத்திலேயே நவீன நாடகப் பனுவல்களைப் படைப்பதிலும் முனைந்துவிட்டார். 1968-ல் ‘நடை’ இதழில் அவரது முதல் நாடகமான ‘காலம் காலமாக’ பிரசுரமானது. 1974-ல் அவரது முதல் புத்தகமாக வெளிவந்தது, ‘நாற்காலிக்காரர்’ என்ற நவீன நாடகத் தொகுப்புதான். ‘க்ரியா’ வெளியீடு. ‘காலம் காலமாக’, ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’ ஆகிய மூன்று சிறு நாடகங்கள் அடங்கியது.

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மற்றும் ஆளுமைத் திறன் மூலம் கிளர்ந்த உத்வேக வித்துதான் முத்துசாமியின் நவீன நாடக முயற்சிகளுக்கும், கூத்துப்பட்டறையின் உருவாக்கத்துக்கும் உந்துதலாக இருந்திருக்கிறது. “எனது நாடக முயற்சிகளுக்குப் பின்புலமாக இருந்தது இரு விஷயங்கள். ஒன்று, காட்சிகள். கிராமத்தில் நான் கண்ட மரங்கள், செடி-கொடிகள், ஊர்வன, பறப்பன; நகரத்தில் பார்த்த நவீன நடனங்கள். இரண்டாவது, புதுக்கவிதை. மொழியையும் அதன் புதிய வீச்சையும் புதுக்கவிதைகள் எனக்குக் காட்டிக்கொடுத்தன” என்கிறார் முத்துசாமி.

பின்னர், வெங்கட் சாமிநாதன் டில்லி சங்கீத நாடக அகாடமியில் 1965 அல்லது 66-ல் பார்த்த நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து பற்றியும், தெருக்கூத்துதான் நம்முடைய மகத்தான பாரம்பரியத் தியேட்டர் என்ற எண்ணத்தையும் ஒருமுறை முத்துசாமியோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். அன்றிலிருந்து அது ஒரு உந்துதலாக முத்துசாமியின் மனதில் தங்கியது. 1975 நவம்பர் மாதம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைவாணர் அரங்கில் நடத்திய கிராமியக் கலை விழாவில் புரிசை நடேசத் தம்பிரானின் ‘கர்ணன்’ தெருக்கூத்தைக் காணும் வாய்ப்பு முத்துசாமிக்குக் கிட்டியது. இது அவரது வாழ்வின் இயக்கத்தைத் திசை மாற்றிய முக்கிய நிகழ்வாக அமைந்தது. முத்துசாமியைத் தெருக்கூத்து ஆட்கொண்டது. ‘தெருக்கூத்து தமிழர்களுடைய தியேட்டர். வீரியமிக்க தங்கள் தியேட்டரை எப்படித் தமிழர்கள் புறக்கணித்துவிட்டார்கள்?’ என்ற ஆதங்கத்திலிருந்து ஒரு அர்ப்பணிப்புமிக்க, அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்கினார் முத்துசாமி. 1977-ல் ‘கூத்துப்பட்டறை’ தொடங்கப்பட்டது. ஒரு கனவு வடிவம் பெற்றது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

SCROLL FOR NEXT