நினைவுகள் சிலருக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம்; சிலருக்குத் துயரார்ந்த அனுபவமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், நினைவுகள் என்பது மனித இருப்புக்கு இன்றியமையாதது. வாழ்க்கைக்கான அடிப்படை சாத்தியமாக நினைவுகளே இருக்கின்றன. தூண்டுதல்கள், பிம்பங்கள், உணர்வுகள் போன்றவற்றின் வடிவங்களை நினைவுகள் கொண்டிருப்பதால் அவை கலைஞர்களுக்கான கருவியாகச் செயல்படுகின்றன. சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பையைச் சேர்ந்த பன்னிரண்டு கலைஞர்கள், நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய படைப்புகள், ‘நினைவுகளின் வடிவங்கள்’ என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வேதா கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 8 அன்று தொடங்கிய இந்த ஓவியக்காட்சி, வரும் மே 6 வரை நடைபெறுகிறது.
ஓவியர் மார்க் ரத்தினராஜ் தன் சிறுவயதில் தந்தையுடன் சென்று பார்த்த தெருக்கூத்தின் நினைவுகளைப் படைப்பாக்கியிருக்கிறார். கடந்த காலத்தின் உணர்வுகளை நிகழ்காலத்துக்குக் கடத்தும் விதமாக பாரம்பரியக் கதவுகளைப் படைப்புகளாக்கியிருக்கிறார் சந்தான கிருஷ்ணன். செராமிக் கலைஞர் பொற்றரசன், காலம்காலமாக வழக்கில் இருக்கும் நம்பிக்கை, புராணம், பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். கலைஞர்கள் தங்கள் நினைவுகளைக் கலையாக்கியிருக்கிறார்கள்; அந்தக் கலைப் படைப்புகளைக் காணும் நாமோ நம் நினைவுகளுக்கு ஓர் உருவம் கொடுக்க முயல்கிறோம். நினைவுகளைப் போலவே கலையும் மனித இருப்புக்கு இன்றியமையாததுதான்.
இந்த ஓவியக் காட்சி பற்றிய மேலும் தகவல்களுக்கு: www.galleryveda.com