இலக்கியம்

வெங்கட் சாமிநாதன்: உரத்த சிந்தனைகளின் உயிர்ச் சுடர்

சி.மோகன்

நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான சீரிய விமர்சன இதழாகவும் சிறுபத்திரிகை என்ற கருத்தாக்கத்தின் லட்சிய மாதிரியாகவும் சி.சு.செல்லப்பாவால் 1959-ல் தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழ் வெங்கட் சாமிநாதனின் எழுத்துலகப் பிரவேசத்துக்கான முதல் தளமாக அமைந்தது. அதன் 1960 ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் வெ.சா.வின் முதல் கட்டுரையான ‘பாலையும் வாழையும்’ வெளியானது. நம் கலை இலக்கிய, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் நிலவும் சீரழிவுக்கான நோய்மைக் கூறுகளை நம் மரபின் தொடர்ச்சியிலிருந்து அறியும் பிரயத்தனமே அக்கட்டுரை. அப்போது அவருக்கு வயது 27. அதனையடுத்து எழுத்துலகில் அவர் மேற்கொண்ட நெடிய பயணம் பல்வேறு பரிமாணங்கள் கொண்டது. 1970 - 80களில் இவருடைய உரத்த சிந்தனைகள் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அவருடைய குரலின் தீவிரத் தன்மையிலும் மெய்யான அக்கறையிலும், சத்திய வேட்கையிலும் சூழல் எழுச்சி கொண்டது. 1978-ல் வெளிவந்த வெ.சா.வின் ‘ஓர் எதிர்ப்புக் குரல்’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் சுந்தர ராமசாமி, “தமிழ்க் கலைத் துறைகள்மீது வெ.சா. கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும்” என்கிறார். மேலும் அவரின் விமர்சனப் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுகையில் “ஒரு நோயாளியைப் பரிசீலனை செய்து, நோய்க்கூறு பற்றிய தங்கள் ஆய்வில் வேற்றுமை கொள்ளும் காரியமாக க.நா.சு., செல்லப்பா ஆகியோரின் நிலைகளை நாம் கண்டால், மூன்றாவது மருத்துவர் ஒருவர் புகுந்து, தன் வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து, ‘நோயாளி இறந்து பல்லாண்டு காலம் ஆயிற்று’ எனக் கூறிய காரியமாகத்தான் வெ.சா.வின் நிலை இருந்தது” என்பதாக வெ.சா.வின் தனித்துவ நிலைப்பாட்டைக் கணிக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் ஒரு தொடர் யாத்ரீகர். அவரை அடுத்தடுத்து ஆட்கொண்ட அனுபவங்களின் சேர்மானங்களிலிருந்து அவருடைய பார்வைவெளி விரிவும் விகாசமும் பெற்றது. அவருடைய பல ஆண்டு கால டெல்லி வாழ்க்கை அளித்த உலகத் திரைப்பட அனுபவங்கள், நவீன ஓவிய சிற்பக் கண்காட்சிகள், சங்கீத நாடக அகாடமியின் இசை, நாடக நிகழ்வுகள் என விரிந்த அவருடைய அனுபவப் பரப்புக்கேற்ப அவருடைய பார்வைவெளியும் விரிந்துகொண்டே போனது. டெல்லி சங்கீத நாடக அகாடமியில் 1965 அல்லது 66-வாக்கில் நிகழ்ந்த புரிசை நடேசத் தம்பிரானின் தெருக்கூத்தைப் பார்த்தபோது பிரமிப்பும் பரவசமும் கொண்டார் வெ.சா. அவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக இதை அவர் கருதினார். உலகின் மிகச் சிறந்த நவீன நாடக மேதைகளின் படைப்புகளோடும் கருத்துகளோடும் பரிச்சயம் கொண்டிருந்த வெ.சா., நம்முடைய பாரம்பரிய ‘தியேட்ட’ராகத் தெருக்கூத்தை இனம் கண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவருடைய பரந்துபட்ட அக்கறைகளில் ஒன்றாக தியேட்டர் மற்றும் நாட்டார் கலைகள் அமைந்தன. டெல்லியில் பணியாற்றியபடி தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தன் எழுத்தால் மட்டுமல்ல, கடிதங்கள் மூலமும் காரியங்களை முடுக்கிக்கொண்டிருப்பார். ஏதோ ஒரு வகையில் உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருப்பார். மதுரையில் நாங்கள் ‘வைகை’ இதழ் தொடங்குவதற்கு முன்னரே, காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பணியாற்றும் சே.ராமானுஜம் பற்றிக் குறிப்பிட்டு அவரைச் சந்திக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். டெல்லி, தேசிய நாடகப் பள்ளியில் படித்து வெளிவந்தவர்களில் ராமானுஜம் மட்டுமே தமிழ்நாட்டில் நாடகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருப்பதாகவும் அவரைச் சந்தித்து அவரைப் பற்றிப் பதிவு செய்யும்படியும் வற்புறுத்தியிருந்தார்.

சிறுபத்திரிகைச் சூழலில் ராமானுஜம் அறிமுகமாவதும் செயல்படுவதும் தமிழ் நாடகச் சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்துமென்றும் குறிப்பிட்டிருந்தார். என்.சிவராமனும் நானும் காந்தி கிராமம் சென்று அவரைச் சந்தித்தோம். வெ.சா.வும் அவரிடம் விடாது தொடர்புகொண்டிருந்தார். 1977-ல் நாடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை ராமானுஜம் 10 நாட்கள் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் நடத்தினார். அதன் தயாரிப்பாகக் கடைசி நாளின் மாலையில் சங்கர பிள்ளையின் ‘கறுத்த தெய்வத்தைத் தேடி’ நாடகமும் ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ நாடகமும் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றன.

தமிழ்ச் சூழலில் வெ.சா. விரும்பிய பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம், பரீக்‌ஷா, வீதி நாடகம் போன்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவும் இசைவாகவும் தெருக்கூத்து, கணியான் கூத்து, பாகவத மேளா, பாவைக்கூத்து போன்ற நாட்டார் கலைகள்மீது வெ.சா.வின் கவனம் குவிந்தது. நம்முடைய கலை மரபின் பேராற்றலாக நாட்டார் கலைகளைக் கண்டார். அவற்றில் வெளிப்பட்ட பித்துநிலையையும் அழகியல் சாத்தியங்களையும் நம்முடைய கலை மரபின் உன்னதங்களாகப் போற்றினார்.

அவருடைய உரத்த சிந்தனைகளின் பிரதிபலிப்புகளான அவருடைய கட்டுரைகள் பல தொகுப்புகளாக வெளிவந்தன. தார்மீக ஆவேசமும் மெய்யான அக்கறையுமே அவருடைய எழுத்தியக்கமாக கலைத் துறைகளின் சகல தளங்களிலும் அமைந்தது. நம்முடைய கலை இலக்கியச் சூழலின் வறட்சி பற்றியும் வளங்கள் பற்றியுமான தீட்சண்யமிக்க பார்வைகளாக ‘பாலையும் வாழையும்’, ‘ஓர் எதிர்ப்புக் குரல்’; நவீன ஓவியக் கலை பற்றிய அவருடைய அவதானிப்புகளாக ‘கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு’, கலைவெளிப் பயணங்கள்’; தமிழ் நாடகச் சூழல் குறித்த ‘அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை’; நாட்டார் கலைகள் பற்றிய அனுபவப் பகிர்வாக ‘பாவைக்கூத்து’; இலக்கியத்தின் பொய்முகங்கள் பற்றியதாக ‘இலக்கிய ஊழல்கள்’ ஆகியவை அவருடைய குறிப்பிடத்தகுந்த நூல்கள். அவருடைய ஒரே படைப்பாக்கம் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைக்கதை மட்டுமே.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் இலக்கிய விருது’ 2003-ல் இவருக்கு அளிக்கப்பட்டது. பணி ஓய்வுக்குப் பின், 1990-களின் தொடக்கத்தில் சென்னையில் வீடு கட்டிக் குடிவந்த வெ.சா., மனைவியின் மறைவுக்குப் பின், பெங்களூருவில் பணிபுரிந்துவந்த தன் ஒரே மகனுடன் வசித்தார். 2015-ல் மறைந்தார். பெங்களூருல் அவர் வசித்த காலத்தின் நினைவுகளை அவர் மறைவுக்குப் பின் ‘வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள்’ என ‘தீராநதி’ இதழில் பாவண்ணன் தொடராக எழுதியிருக்கிறார்.

அவருடைய எழுத்தியக்கமானது, சிறுபத்திரிகை வட்டத்துக்குள்தான் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அதன் பாதிப்பில் செழித்ததுதான் சிறுபத்திரிகை இயக்கம். நவீன இலக்கியம், நவீனக் கலை, நவீன நாடகம், நாட்டார் கலைகள், உலக சினிமா என எல்லாக் கலை ஊடகங்களிடத்தும் இன்று ஒரு இலக்கிய வாசகன் ஈடுபாடும் உறவும் கொள்வதென்பது வெ.சா. என்ற இயக்கசக்தியின் விளைவுதான். இந்த விளைவுதான் இன்று நமக்கான நம்பிக்கையாகவும் இருக்கிறது.

தொடரும்...

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

SCROLL FOR NEXT