இலக்கியம்

நூலின் தடம்: ஒரு நூற்றாண்டின் கொடை

ஷங்கர்

தமிழ் மொழியின் வரலாற்றில் நடந்த பெரிய பணி என்று சென்னைப் பல்கலைக்கழகம் (அப்போது மெட்ராஸ் பல்கலைக்கழகம்) உருவாக்கிய தமிழ் லெக்ஸிகனைச் சொல்லலாம். திவாகரம், பிங்கலம் உள்ளிட்ட நிகண்டுகளை உருவாக்கிய தமிழ் மரபில், அதன் சாதகமான அம்சங்களை, மேற்கத்திய அகராதியியல் முறைமைகளுடன் இணைத்து விஞ்ஞானப் பார்வையுடன் வெளியான முதல் தமிழ்ப் பேரகராதி இது.

1912-ல் மெட்ராஸ் மாகாண அரசு, அதிகாரபூர்வமான தமிழ்ப் பேரகராதி ஒன்றைக் கொண்டுவருவதற்கு முடிவுசெய்தது. இதற்கான முன்வரைவை அரசுக்குக் கொடுத்தவர் ஜே.எஸ். சாண்ட்லர். 1862-ல் வெளியான வின்ஸ்லோ தமிழ்-ஆங்கில அகராதியை விரிவுபடுத்தும் திட்டமாகவே இந்த முயற்சி தொடங்கியது. தமிழறிஞர் ஜி.யு.போப் திரட்டிய மொழித் தரவுகளும் இந்த முயற்சியை முன்செலுத்தின.

சாண்ட்லரின் முன்வரைவையும், போப்பின் சேகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு 1913-ல் அகராதிப் பணி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. ஜே.எஸ். சாண்ட்லர் இதன் முழு நேரப் பதிப்பாசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

விரிவான ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு பணி ஆரம்பித்தது. தமிழ் லெக்ஸிகனில் பணிபுரிந்தவர்கள், ஆலோசகர்கள், வெவ்வேறு வகையில் பங்களித்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பட்டியல் தமிழ் லெக்ஸிகனின் பெரிய தாள்களில் 10 பக்கங்கள் நீள்கின்றன என்றால் பாருங்களேன்!

தமிழ் லெக்ஸிகனுக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. அதற்காக வாங்கப்பட்ட தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகைதான் இந்தியாவில் அலுவலக உபயோகத்துக்காக முதலில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தட்டச்சு இயந்திரமாக இருக்கும்.

1926-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்ற எஸ்.வையாபுரிப் பிள்ளைதான் இந்த அகராதிப் பணியை விரைவாக்கி தமிழ் மொழியின் பிரம்மாண்ட கனவான அகராதியைச் சாத்தியமாக்கினார்.

பதிப்பிப்பதற்கு முன்பு சொற் களெல்லாம் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டன. மொழியியலாளர்கள், குடிமக்கள் பிரதிநிதிகள், வட்டார வழக்காறுகளில் தேர்ச்சியுள்ளவர்கள், துறை வல்லுநர்கள் போன்றோருக்கு அனுப்பப்பட்டு ஆலோசனைகள் கேட்கப்பட்டன.

தமிழ் லெக்ஸிகன் பணி நடந்துகொண்டிருந்தபோது மனித வரலாற்றிலேயே மகத்தான அகராதியான ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதியின் பணிகளும் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தன. அதன் பதிப்பாசிரியர்களுள் ஒருவரான வில்லியம் கிரெய்கீக்குத் தமிழ் லெக்ஸிகனின் மாதிரிப் பக்கங்கள் அனுப்பப்பட்டு ஆலோசனை பெறப்பட்டது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அதேபோல், உலகெங்கும் உள்ள பல்வேறு அறிஞர்களிடமிருந்தும் ஆலோசனை பெறப்பட்டது.

1924-ல் லெக்ஸிகனின் அச்சு வேலை வேகமாகத் தொடங்கியது. 1936-வரை ஆறு தொகுதிகளும் 25 பகுதிகளாக வெளியாயின. முதலில் 1,04,405 சொற்களுடன் வெளியான இந்தப் பேரகராதியுடன், பின்னர் 20 ஆயிரம் சொற்களைக் கொண்ட இணைப்புத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு வையாபுரிப் பிள்ளைக்கு ராவ் பகதூர் கவுரவத்தை அளித்தது.

இந்த பேரகராதி 1982-ல் மறு அச்சு செய்யப்பட்டது. இதை விரிவாக்கி மறுபதிப்பு செய்யும் பணியில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தற்போது ஈடுபட்டுள்ளது.

தமிழ் லெக்ஸிகனின் தனித்துவம்குறித்து பேராசிரியர் வீ. அரசு, “இந்திய மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இதைப் போன்ற விரிவான, தரமான, அறிவியல்பூர்வமான அகராதி வேறெதுவும் இல்லை” என்கிறார்.

SCROLL FOR NEXT