360: திருப்பூரில் புத்தகத் திருவிழா
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 16-வது திருப்பூர் புத்தகக்காட்சி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை திருப்பூர் காங்கேயம் சாலையிலுள்ள பத்மினி கார்டனில் நடைபெறுகிறது. 150-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறுகின்றன. சென்னை புத்தகக்காட்சியைத் தவறவிட்டவர்களெல்லாம் திருப்பூருக்குப் படையெடுக்கலாம்.
ப.சரவணனுக்கு ‘நாஞ்சில்நாடன்’ விருது
கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் செயல்பட்டுவரும் ஆளுமைகளுக்கு ‘கோவை சிறுவாணி வாசகர் மையம்’ வழங்கும் ‘நாஞ்சில்நாடன்’ விருது,
இந்த ஆண்டு தமிழியல் ஆய்வாளரும், பதிப்பாசிரியருமான ப.சரவணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்!
வீர சரித்திரத்தின் மறுபதிப்பு
பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் ‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரத்திர’த்தைச் செம்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய போரை நாள், கிழமை, நேரம் என்று விவரிக்கும் துல்லியமான வரலாறு இது. வானம் பொழியுது பூமி விளையுது
என்ற புகழ்பெற்ற திரைப்பட வசனம் ஜெகவீரபாண்டியனாரின் வரிகளிலிருந்து உருவானதுதான். 1947-ல் முதல் பதிப்பும் 1954-ல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்த இந்த வீர சரித்திரத்தைச் செம்பதிப்பாக வெளியிட வேண்டும் என்ற தனது 25 ஆண்டு கால விருப்பம் நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் கே.எஸ்.ஆர்.
அமேசான் கிண்டில்
போட்டி இறுதிநாள் நெருங்குகிறது...
அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிடப்படும் சிறந்த புதிய தமிழ்ப் படைப்புக்கு ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ள பிப்ரவரி 9, 2019-க்குள் அமேசான் தளத்தில் புதிய மின்னூல்களை வெளியிட வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் நாவல், சிறுகதை அல்லது கவிதைகள் 10,000 வார்த்தைகளுக்கு மேற்பட்டதாகவும் இதுவரை பிரசுரமாகாத புதிய படைப்பாகவும் இருக்க வேண்டும்.
இது தவிர 2,000 வார்த்தைகளிலிருந்து 10,000 வார்த்தைகளுக்குள் வெளியிடப்படும் மற்றொரு படைப்புக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும். ‘படிக்கும் புத்தகங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடியாத வாசகர்களுக்கு கிண்டில் ஒரு வரப்பிரசாதம், அறிமுகம் இல்லாத இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிடவும் அரிய வாய்ப்பு’ என்கிறார் இப்போட்டியின் நடுவர்களில் ஒருவரான இரா.முருகன்.
பவா செல்லதுரையின் பெருங்கதையாடல்
எப்போதும் நண்பர்கள் சூழ இருக்கும் பவா செல்லதுரை, கதைகள் சொல்வதில் வல்லவர். திருவண்ணாமலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ‘கதை கேட்க வாங்க’ என்ற சந்திப்பை நடத்திவருகிறார் பவா. தான் படித்த சிறந்த சிறுகதைகளைப் பற்றிய அவரது பேச்சு காணொலிகளாக இணையத்திலும் பிரபலம்.
தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களைப் பற்றி மலையாள நாளேடான ‘தேசாபிமானி’யில் அவர் எழுதிவரும் தொடர் பத்திக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை திருவண்ணாமலையில் சிறுகதை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்த பவா, அடுத்து நாவல்களுக்கு நகர்ந்திருக்கிறார். இன்று
மாலை திருவண்ணாமலையில் நடைபெறும் பெருங்கதையாடல் நிகழ்ச்சியில் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலை குறித்து பெருங்கதையாடல் நிகழ்த்தவிருக்கிறார் பவா செல்லதுரை. தொடர்புக்கு: 94458 70995
தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்