நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கும் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு.
திராவிட இயக்க தலைவர்கள், மாநாடுகள், போராட்டங்கள் என்று எதுபற்றி கேட்டாலும் நினைவிலிருந்தே விவரித்துவிடுவார். கூடவே, அது தொடர்பான புத்தகங்களை ஆதாரங்களாகவும் சுட்டிக்காட்டுவது அவரது இயல்பு. திராவிட இயக்க வரலாற்றை 12 பகுதிகளைக் கொண்ட நூல்வரிசையாக எழுதிக்கொண்டிருக்கிறார். முக்கியமான சமூக, அரசியல் விவாதங்களையொட்டி வெவ்வேறு தலைப்புகளில் சிறிதும் பெரிதுமான நூல்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். இது மட்டுமில்லாமல், நடப்பு அரசியல் சார்ந்த காரசாரமான அரசியல் கட்டுரைகளையும் ‘முரசொலி’யில் அடிக்கடி எழுதிக்கொண்டிருக்கிறார். மந்தைவெளியில் உள்ள அவரது நக்கீரன் பதிப்பக அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து...
திராவிட இயக்க வரலாறு எழுதும் எண்ணம் எப்போது உதித்தது?
அண்ணா காலத்து ஆசை அது. அப்படியொரு ஆசை எழுந்ததற்குக் காரணமும் உண்டு. திருவல்லிக்கேணியில் நடேசனாரின் நினைவு விழாவில் கலந்துகொண்டு அவரைப் பற்றி அண்ணா பேசினார். அப்போதே நடேசனாரைப் பற்றிய அண்ணாவின் குறிப்புகளை சேர்த்துவைத்திருக்க முடியும். ஆனால், அது முடியாமல் போயிற்று. அண்ணாவின் வீட்டிலும் அதற்கான வசதிகள் இல்லை. அவருக்கு அலுவலகமும் இல்லை. எனவே, திராவிட இயக்க முன்னோடிகள் பற்றி எப்போது நான் கேள்விப்படுகிறேனோ அதை எழுதிவைக்க ஆரம்பித்தேன். இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த பணி. வரலாற்றோடு நடப்புச் சம்பவங்களையும் இணைத்து எழுதுவது என்னுடைய பாணி.
இந்தப் பெருந்திட்டம் எந்த நிலையில் இருக்கிறது?
திராவிட இயக்க வரலாற்றை நீதிக்கட்சி வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர் கழக வரலாறு, திமுக வரலாறு என்று 4 தொகுதிகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பகுதிகள், திமுக வரலாற்றுக்கு 6 பகுதிகள் எனத் திட்டமிட்டிருக்கிறேன். நீதிக்கட்சி வரலாறு இரண்டு பகுதிகளும் வெளிவந்துவிட்டன. சுயமரியாதை இயக்க வரலாற்றின் முதல் பகுதியை இப்போதுதான் எழுதி முடித்திருக்கிறேன். திமுக வரலாற்றின் முதல் மூன்று பகுதிகளும் வெளிவந்துவிட்டன. அடுத்து நான்காவது பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த 2 நூல்களும் வெளிவரும்.
இயக்க வரலாறு எழுதுவதற்காக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள்?
காலை ஆறரை மணி தொடங்கி ஒன்பதரை மணி வரைக்கும் ஆறு நாளிதழ்கள் படிக்கிறேன். காலை நேரம் என்பது நாளிதழ் படிப்பதற்கும் குறிப்புகள் எடுப்பதற்குமே சரியாக இருக்கிறது. முரசொலிக்கு கட்டுரை எழுதும் வேலைகளையும் காலையிலேயே முடித்துவிடுவேன். அதன் பிறகு, பதிப்பக அலுவலகத்துக்கு வந்துதான் புத்தகம் எழுதும் வேலைகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் ஒதுக்குகிறேன். சில நாட்கள், பத்து மணி நேரம்கூட ஆகும். அதுவும் போதுமானதாக இல்லை. திடீரென்று ஏதேனும் சந்தேகம் வந்தால் எழுதும் வேலை தடைப்பட்டு நின்றுவிடுகிறது. தகவல் தேடுவதற்கே மூன்று நாட்களாகிவிடும். அது குறித்து யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். பெரியார் திடல் நூலகத்துக்கும் அறிவாலயம் நூலகத்துக்கும் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது எழுதும் பணி பாதியிலேயே நிற்கும். சில சமயங்களில் ஒரு விவரத்தைத் தேடியெடுக்கவே இரண்டு மூன்று மாதங்களாகிவிடுவதும் உண்டு. அப்படியும் அந்தத் தகவல் கிடைக்கவில்லையென்றால் அதைக் குறித்துப் புத்தகத்திலேயே குறிப்பிட்டுவிடுவது என் வழக்கம்.
ஆய்வுகள் தொடர்பாக யாருடனும் விவாதிப்பது உண்டா?
எனக்கு ஒரு சந்தேகம் வரும்போது அதைப் பற்றி விவாதிக்கக் கூடிய நிலையில் இருந்தவர்களெல்லாம் இப்போது இறந்துவிட்டார்கள். இரா.செழியன், டி.வி.நாராயணசாமி, நாவலர், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோரோடு தினமும் தொலைபேசியில் விவாதிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அப்படியானவர்கள் அருகிவிட்டார்கள்.
அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் உங்களுடன் விவாதிக்கிறார்களா?
தொலைபேசி வழியாக நிறைய பேர் சந்தேகங்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். தகவல்களைக் கூறுகிறேன். எல்லாத் தகவல்களையும் என் வழியாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்களோயொழிய நூலகங்களுக்குச் சென்று தேடுவதற்குத் தயாராக இல்லை என்பது மட்டும்தான் குறையாகப்படுகிறது. நான் சொல்கிற தகவல் சரிதானா என்பதை சரிபார்ப்பதற்காகவாவது அவர்கள் நூலகங்களுக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அதுபோல, சில இளம் ஆய்வாளர்கள் நுட்பமான கேள்விகளைக் கேட்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.
ஆய்வுக்காக எந்தெந்த நூலகங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
பெரியார் திடல், அறிவாலயம் தவிர மறைமலையடிகள் நூலகம், கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், உவேசா நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா ஆகிய நூலகங்களைப் பயன்படுத்துகிறேன். சில நூலகங்களில் புத்தகங்களைக் கொடுப்பது கிடையாது என்பதால் அங்கேயே இருந்து குறிப்பெடுக்கவும் வேண்டியிருக்கிறது. மறைந்த பேராசிரியர் இரா.இளவரசுவின் தனி நூலகத்தை முன்பு பயன்படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது பொற்கோ, வீ.அரசு, இ.சுந்தரமூர்த்தி ஆகியோரும் தங்களது புத்தகச் சேகரிப்புகளைக் கொடுத்து உதவுகிறார்கள். ‘தி இந்து’, ‘ப்ரண்ட்லைன்’ இதழ்களில் வெளிவரும் புத்தக விமர்சனங்களிலிருந்து தேவைப்படும் ஆங்கிலப் புத்தகங்களை மட்டும் வாங்குவேன். தகவல்களுக்காக ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவது என்னுடைய பொருளாதாரச் சக்திக்கு மிகுந்த காரியம்தான்.
திராவிட இயக்கத்திடமிருந்து எப்படியான எதிர்வினைகள் வந்திருக்கின்றன?
வா.செ.குழந்தைசாமி, வைரமுத்து, கம்பம் செல்வேந்திரன் ஆகியோரின் பாராட்டை முக்கியமானதாகக் கருதுகிறேன். என்னுடைய நூலைப் படித்துவிட்டு செழியன் சொன்னார், “நம்முடைய காலத்தில் இது பேசப்படாது. நம்முடைய காலத்துக்குப் பிறகு பேசப்படும் நூலாக இது இருக்கும்” என்று. ஆனால், இளைஞர்களிடமிருந்து கிடைக்கும் மதிப்பும் வரவேற்பும் எனக்கு மனநிறைவு தருகிறது. ஆயுதமே எடுக்காமல் சாதாரண மக்களிடம் ஒரு அறிவுக்கிளர்ச்சியை உருவாக்கிய வல்லமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. சென்னையில் இருந்த அனைத்து அச்சகங்களிலும் அச்சுக் கோப்பாளர்களாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது அதற்கு ஓர் உதாரணம். இயக்கத்துக்கான ஈர்ப்பு என்பது அதன் கொள்கையிலேதான் இருந்தது. அப்போதிருந்த தலைவர்களும் பேச்சாளர்களும் தினந்தோறும் படித்தார்கள். அன்றைய செய்திகளை மேடையில் விமர்சித்துப் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பேசினார்கள். அந்த பாணியை அவர்கள் வளர்த்தெடுத்துக்கொண்டது வாசிப்பின் வழியாகத்தான். வாசிப்புதான் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற முடியும்.
புத்தகக்காட்சிக்கு வெளிவந்திருக்கும் தங்களது புத்தகங்கள்?
‘திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும்’, ‘திராவிட இயக்கமும் திராவிட நாடும்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. முரசொலி மாறனைப் பற்றிய ஒரு சிறு நூலும் வெளியாகியுள்ளது. டி.கோபாலச் செட்டியார் எழுதி 1920-ல் வெளிவந்த ‘ஆதி திராவிடர் பூர்வகுடி வரலாறு’ நூலை மறுபதிப்பு செய்திருக்கிறேன்.
சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம்?
ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கும் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’. உ.வே.சா எழுதிய நூல்களை ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கடிதங்கள் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்கின்றன. அதைப் பற்றியெல்லாம் சலபதி தன்னுடைய முன்னுரையில் தொகுத்துக் கூறியிருக்கிறார் என்றாலும் இன்னும் விரிவாகப் பேச வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. உ.வே.சா.வை ஒரு ஆளுமையாகப் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆனால், அவரது தமிழ்ப் பணிக்குப் பின்னால் தமிழகமே பின்னின்று இயங்கியிருக்கிறது. சாதி பேதங்களைக் கடந்து அவருக்கு தமிழ் மக்கள் உதவியிருக்கிறார்கள். அதைக் குறித்த விரிவான தகவல்கள் இந்தக் கடிதக் கருவூலத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் அளவுக்கு அதில் விஷயங்கள் இருக்கின்றன.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in