‘பூவுலகின் நண்பர்கள்’- சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் அமைப்பு, சென்னைப் புத்தகக் காட்சியில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் அரங்கு (எண் 112) அமைத்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதையும் உள்ளடக்கும் சுற்றுச்சூழல் விஷயங்களைப் பற்றிப் பேசும் புத்தகங்கள்தான் இந்த அரங்கின் தனித்துவம். ‘பூவுலகின் நண்பர்கள்’ வெவ்வேறு பதிப்பகங்களுடன் இணைந்து வெளியிட்ட புத்தகங்களுடன் பிற பதிப்பகங்கள் வெளியிட்ட சுற்றுச்சூழல் புத்தகங்களும் இங்கே ஒருசேரக் கிடைக்கும். 200-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் புத்தகங்கள் இங்கே கிடைப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை நேசர்கள் எல்லோரும் இந்த அரங்கைத் தேடிவந்து புத்தகங்கள் வாங்கிச்செல்கிறார்கள்.
‘சிறியதே அழகு’ என்ற வரிசையில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, மழைக்காடுகளின் மரணம், எறும்புகளும் ஈக்களும் உள்ளிட்ட ஆறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்கள் பூவுலகின் நண்பர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒரு புத்தகத்தின் விலை ரூ.20. இந்த அரங்கின் மிக முக்கியமான புதுவரவு- ‘கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் வாழ்க்கை வரலாறு’.