தமிழ் படிப்போரின் நிலை இப்போதிருப்பதை விட முன்பெல்லாம் கொஞ்சம் கடின மாகவே இருந்துள்ளது. ‘தமிழ் இலக்கியத்தின் உப பிரம்மா’ என்று இராஜாஜியால் புகழப்பட்ட உ.வே.சா. அவர்களுக்குக்கூட மாநிலக் கல்லூரியில் நேர்ந்த அவலங்களை அவரது எழுத்துக்கள் வழி அறிய முடிகிறது.
இதே கல்லூரியில்தான் சமஸ்கிருதம் கற்பித்த குப்புசாமி சாஸ்திரிகளின் ஊதியம், தமிழ் கற்பித்த கா. நமச்சிவாயம் முதலியாரின் ஊதியத்தைவிட அதிகமாக இருந்தது. பெரியாரின் தலை யீட்டால் இந்த ஊதிய முரண்பாடு களையப்பட்டதும் பின்னாலில் பரவலாகப் பேசப்பட்டதும் வரலாற்றுச் செய்தி.
தமிழ் படிப்புகூட மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் என்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் என்றும் கற்பிக்கப்பட்டதே தவிர பரவலாக்கப்படவில்லை. ஒரு சில உதாரணங்கள் இவை.
இத்தகு சூழலில்தான் சைவ ஆதீனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. "சைவமும் தமிழும் தழைத் தினிதோங்குக" எனச் சைவ மடங்களில் வழங்கும் பொன்மொழிக்கேற்ப திருப்பனந்தாள் காசி மடத்தின் தமிழ்த்தொண்டு எவராலும் மறக்க முடியாதது. மற்ற மடங்களை விட அதிக அறக்கட்டளைகளை நிறுவியது இம்மடமே.
இம்மடத்தின் 19-வது பட்டத்து அதிபராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், தமிழின் வளர்ச்சிக்காக ஒரு சாசுவதமான தொண்டைச் செய்தருளினார்.
அதாவது சென்னைப் பல்கலைக்கழகம் ஏற் படுத்திய கீழைத் தேய மொழிகளுக்கான தேர்வுகளுள் தனித்தமிழ் வித்துவான் தேர்வில் ஆண்டுதோறும் முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகையை வழங்க நிரந்தர ஏற்பாடாக ஓர் அறக்கட்டளையை நிறுவியருளினார்.
இங்கிலீஷ் படித்தால் இகத்திற்கு லாபம், சமஸ்கிருதம் படித்தால் பரத்திற்கு லாபம். தமிழ் படித்தாலோ எதற்கும் லாபமில்லை என்றிருந்த காலகட்டத்தில் தமிழ் படிப்போரை ஊக்குவிப்பதற்காக ஆயுள் காப்பீட்டின் மூலம் சுவாமிகள் ஏற்படுத்திய இந்த ஏற்பாட்டைக் கண்டேனும் தமிழையும் தமிழ்வாணர்களையும் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியாக வேண்டும்.
ஓர் அறிவிப்பு: தமிழ் பரிசு ரூபாய் ஆயிரம்
இப்போது திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து அதிபர்களாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகள் அவர்கள் தமிழ்ப் பாஷாபிவிருத்தி விஷயமாகச் செய்துள்ள ஒரு சாசுவதமான தருமத்தைத் தெரிவிக்கிறேன்.
சென்னை, ஸர்வகலா சங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரியண்டல் டைட்டில் பரிக்ஷைகளுள் தனித்தமிழ் வித்வான் பரீக்ஷையில் வருஷந்தோறும் முதல்வகுப்பில் முதல்வராகத் தேறும் மாணாக்கருக்கு ரூபாய் ஆயிரம் பரிசாக அளித்தற்பொருட்டு இவர்கள் 1928-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்கா கண்டத்தில் டாரண்டோ என்னும் நகரத்திலுள்ள ‘தி மானுபாக்ச்சரர்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி’யில் தங்கள் ஆயுளை ரூபாய் 40,000-க்கு இன்ஷ்யூர் செய்து 4,46,416 என்னும் எண்ணுள்ள பாலிஸியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மூலதனம் ஏறக்குறைப் பன்னிரண்டு வருடங்களில் நிறைவடையும். அதுவரையில் இவர்கள் வேறு வரும்படியிலிருந்தே மேற்படி பரிசை வருஷந்தோறும் அளித்துவருவதாக நிச்சயித்து 1929-ஆம் வருஷம் முதற்கொண்டு அளித்து வருகிறார்கள்.
சென்னை கிறிஸ்டியன் காலேஜில் தமிழ் பண்டிதராக உள்ள வி.மு.சுப்பிரமணிய ஐயரவர்கள், 1929-ஆம் ஆண்டிலும், சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்ஸிட்டியில் தமிழ்ப் பண்டிதராக உள்ள ஆ.பூவராகம் பிள்ளையவர்கள் 1930-ஆம் ஆண்டிலும், K. சுந்தரமூர்த்தி ஐயர், M.A, அவர்கள் சென்ற ஆண்டிலும் முறையே இப்பரிசைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வருஷம் திரிசிரபுரம் நாஷ்னல் காலேஜிலுள்ள தமிழ்ப் பண்டிதர் T.P. பழனியப்ப பிள்ளையவர்கள் இப்பரிசை அடையக்கூடுமென்று தெரிகிறது.
மேற்கண்ட பரிக்ஷையில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்பவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான மார்க்குகள் பெற்றிருந்தால் அவர்களுடைய பெயர்களைத் தனித்தனியே சீட்டுக்களில் எழுதித் தக்கவர்கள் முன்னிலையில் மேற்டி சீட்டுக்களைக் குலுக்கிப் போட்டு எடுப்பதில் தெய்வ சம்மதமாக எவருடைய பெயர் கிடைக்கிறதோ அவரே மேற்படி பரிசைப் பெறுவதற்கு உரிமையுள்ளவராவர்.
இதனைக் கண்ணுறும் தமிழ் மாணாக்கர்கள் விசேஷமான முயற்சியை மேற்கொண்டு தமிழைப் படித்து இந்தப் பரிசைப் பெறுவதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளும் பொருட்டு இவ்வாறு தெரிவிக்கலானேன்.
இங்ஙனம்,
திருப்பனந்தாள் சுப்பராய பிள்ளை
ஸ்ரீகாசி மடம்,
8-8-‘32