மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமம். 1931 அக்டோபர் மாதம் 21-ம் தேதி புதன்கிழமை. மாலை 5 மணி. கோவில் வாசல் முன்பு அந்த அலங்கரிக்கப்பட்ட ரெட்டை மாட்டு வண்டி நிற்கிறது. வண்டி நிறைய புத்தகங்கள். வண்டியிலிருந்து கிராமபோன் ரெக்கார்டுகளில் பாடல்கள் ஒலிக்கின்றன. மக்கள் ஆர்வத்துடன் கூடுகிறார்கள். ஊர் வழக்கப்படி ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்கிறார்கள். ஊர்க்காரர்கள் போட்டுவைத்திருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த மனிதர் பேசத் தொடங்குகிறார்.
“நீங்கள் உலக நடப்பைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதில் கதைகள் உண்டு. வரலாறு உண்டு. இலவசமாக இதை நீங்கள் வாசிக்கலாம். உங்களில் படித்தவர்கள், படிப்பறிவற்றவர்களுக்கு வாசித்துக் காட்டலாம். காந்தியடிகள் சொன்னதுபோல ‘அனைவரும் கற்க வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நூலகத் துறை மூலமாக இந்த ஏற்பாட்டை செய்கிறோம். இந்த நடமாடும் நூலகத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்களா?”
பேசியவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். மன்னார் குடியைச் சேர்ந்த கனகசபை பிள்ளைதான் மாட்டு வண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அவர் அந்தப் பகுதியில் முதியோர் கல்வி நடத்திவருபவர்.
கூட்டம் அமைதி காத்தது. ரங்கநாதன் மீண்டும் கேட்கிறார், “யாரேனும் பதில் சொல்லுங்களேன்?”. ஆறு பேர் தயங்கித் தயங்கி முன்வருகிறார்கள். “நாங்க படிக்க ஆர்வமாத்தான் இருக்கோம். ஆனா, பகல் முழுக்க வயக்காட்டுல வேலைசெஞ்சுட்டு சூரியன் சாஞ்சப்புறம்தான் வீட்டுக்கு வருவோம். இருட்டுனப்புறம்தான் படிக்க முடியும்.” ஒருவாறு சொல்லி முடிக்கிறார்கள். ஆண்கள் பகுதியில் தலைவர்போன்று இருப்பவர் சொல்கிறார், “ராத்திரிதான் படிக்க முடியும்னா வெளக்குக்கு ஊத்துறதுக்கு எண்ணெய் யாரு கொடுப்பாக?” பெண்கள் பகுதியிலிருந்து சத்தம் வருகிறது. “நாங்க எண்ணெய் தர்றோம்”.
தலைவர், “நாங்க தர முடியாது” என்று சொல்வதும், “ஒவ்வொரு வீடாக ஒரு ஸ்பூன் எண்ணெய் வாங்கி சேகரிப்போம்” என்று பெண்கள் உற்சாகத்தோடு அவருக்குப் பதில் தருவதும் என காரசாரமான உரையாடல் நீள்கிறது. இறுதியில், பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து கை தட்டி ஆமோதிக்கிறது கூட்டம். இதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் ரங்கநாதனுக்கும், கனகசபைக்கும் பெரும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது. இப்போது கனகசபை பேச ஆரம்பிக்கிறார், “இந்த மாட்டு வண்டி இரண்டு மாதம் கழித்து மீண்டும் வரும். இப்போது எடுத்துப் படித்துவிட்டு அடுத்த முறை வரும்போது திருப்பிக் கொடுக்கலாம். எல்லோரும் படியுங்கள். படித்தவர்கள் மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்” என்கிறார்.
“தேவாரம், திருவிளையாடல் புராணம், பூகோளம், வரலாறு சார்ந்த புத்தகங்கள் சில நிரந்தரமாய் இங்கே இருக்க வேண்டும்” என்று ஒரு இளைஞன் வேண்டுகோள் விடுக்கவும் மீண்டும் இன்னொரு காரசாரமான விவாதத்துக்கு அந்தக் கூட்டம் தயாராகிறது. அறுவடை காலத்தில் ஒவ்வொருவரும் இயன்ற நெல்லைக் கொடுப்பதன் மூலம் சிறு தொகையைப் பெற்று, அதைக் கொண்டு நிரந்தரமாய்ப் புத்தகங்கள் வாங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. ரங்கநாதனும் கனகசபையும் பெரும் மகிழ்ச்சியோடு மன்னார்குடிக்குத் திரும்புகிறார்கள். மக்களின் அறிவு தாகம் அவர்களை உற்சாகப்படுத்துகிறது.
மன்னார்குடியில் நூலக இயக்கத்துக்காகவே ஒரு மாநாடு நடத்திய கனகசபை ஒருவிதமான கொண்டாட்ட மனநிலைக்குச் செல்கிறார். மக்களிடம் கிடைத்த வரவேற்புதான் காரணம். அக்டோபர் 18 முதல் 21 வரை (1931) மன்னார்குடியில் மாநாடு நடத்தினார்.
லண்டன் நூலகத்தில் நூலகப் பயிற்சி பெற்றவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனத்தில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்தியிருப்பதைப் போல நமது நாட்டிலும் செய்தால் என்ன என்று யோசித்து ‘ஸ்லைடு ஷோ’ மூலம் மாட்டு வண்டி நூலகத்தை வடிவமைத்து வெளியிட்டார். அதைப் பார்த்த மன்னார்குடி கனகசபை, “புத்தகங்கள் நிரம்பிய இரண்டு மாடுகள் இழுக்கும் மாட்டு வண்டியை நானே ஏற்பாடுசெய்து தருகிறேன். மாநாட்டில் வந்து பேசி நூலக இயக்கத்தை ஆரம்பியுங்கள்” என்கிறார். அது மகத்தான வெற்றி பெற்றது. நூலக வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை உருவாக்கியது.
72 கிராமங்களுக்கு 275 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார் ரங்கநாதன். சுமார் நான்காயிரம் நூல்கள் 20 ஆயிரம் தடவைகளுக்கு மேல் மக்களிடம் வாசிக்கக் கொடுக்கப்பட்டன. ரங்கநாதனின் மாட்டு வண்டி பயணத்தால் ஈர்க்கப்பட்டு தென்னாற்காடு மாவட்டத்தில் வில்வராய நத்தத்தில் மிதிவண்டி மூலம் நடமாடும் நூலக இயக்கத்தைத் தொடங்கினார் வழக்கறிஞர் டி.ஆர்.சக்கரபாணி.
மிதிவண்டியில் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வீடு வீடாக நூல்களைக் கொண்டுசேர்த்து ஐந்தே மாதங்களில் 1,649 வாசகர்களை உருவாக்கினார். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் மாட்டு வண்டி மூலம் நூலக இயக்கப் பணியை மேற்கொண்டவர் பாலசுப்பிரமணிய ஐயர். தனது வண்டிக்கு பாரதியின் மேல் கொண்ட பற்றால் ‘ஞானரதம்’ என்று பெயர் வைத்தார். ரங்கநாதனின் பணி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் நடமாடும் நூலகம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள்? ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் மைய நூலகத்திலும் ஒரு பேருந்து இருக்கிறது. நூலகங்கள் இல்லாத கிராமப்புறங்களுக்கு இந்த வண்டி செல்கிறது. மக்களிடம் புத்தகங்களை வழங்கி அவர்களின் வாசிப்புக்கு வழிவகைசெய்கிறது.
1948-ல் எஸ்.ஆர்.ரங்கநாதனின் மாணவராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராகியதைக் கேள்விப்பட்டு, ஒருநாள் அதிகாலை ஆறு மணிக்கே அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் ரங்கநாதன். அவரிடம் பொது நூலக சட்ட வரைவைக் கொடுத்து, “இதை எப்படியாவாது சட்டமாக்கித் தர வேண்டும்” என்று குருதட்சணை கேட்கிறார். அனைத்து மக்களும் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ரங்கநாதன் முன்வைத்த இந்தக் கோரிக்கை நிறைவேறியது. அதுதான், 1948 பொது நூலகச் சட்டம். இந்தியாவில் முதன்முதலில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சென்னை மாகாணத்தில்தான்.
தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ரங்கநாதன், கணிதப் பேராசிரியராகவும், சென்னை பல்கலைக்கழக நூலகராகவும் பணியாற்றியவர். தனது வாழ்நாள் சேமிப்பான ஒரு லட்சம் ரூபாயை நூலக இயக்கத்துக்காக வழங்கியவர். ரங்கநாதன் உருவாக்கிய ‘கோலன் பகுப்பு முறை’ உலகின் பல்வேறு நூலகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பை வளர்த்தெடுப்பதற்காக அர்ப்பணித்த ரங்கநாதனின் பிறந்தநாள்தான் தேசிய நூலகர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது நமது பெருமிதங்களுள் ஒன்று!
- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: narumpu@gmail.com
(இன்று எஸ்.ஆர்.ரங்கநாதனின்
126-வது பிறந்தநாள்)