இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போரின் வெவ்வேறு கட்டங்களில் தமிழர் வாழ்விடங்களில் இருந்த பொதுமக்களும் உயிரிழந்தது குறித்த ஊடகப் பதிவுகள் ஏராளம். அதற்கு விதிவிலக்கான சம்பவங்களும் உள்ளன. 1990 ஆகஸ்ட்டிலிருந்து ஒரு மாதத்துக்கும் மேலாக லைடன் தீவு, மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொண்ட ராணுவ வன்முறை ஓர் உதாரணம்.
இதற்குச் சாட்சியமாகச் சிலர், இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலுமாக உலகின் பல்வேறு பகுதிகளில் உதிரிகளாக இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்கள், மரணத்தை மிக அருகில் எதிர்கொண்டது மட்டுமல்லாது, தங்கள் கண் முன்னே ரத்த உறவுகளும் ஊர்க்காரர்களும் வயது பேதமின்றி அடித்துக் கொல்லப்பட்டதை நேரில் கண்டவர்கள்; ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் ரத்த உறவுகள் என்றைக்காவது திரும்ப வரமாட்டார்களா? என்கிற ஏக்கம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களிடமிருந்து அகலவில்லை.
இலங்கைத் தமிழர்களின் போர்த் துயரங்களைத் தொடர்ச்சியாகக் கவனித்து வருபவர்களுக்குக் கூட துலக்கமாகத் தெரியாத இந்த வன்முறை குறித்து, ‘1990-லைடன் தீவு-மண்டை தீவு படுகொலைகளும் புதைகுழிகளும்’ நூல் பேசுகிறது. ஏற்கெனவே இப்படுகொலைகள் குறித்துத் தன் கதைகளிலும் ஊடக வழியிலான உரையாடல்களிலும் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. அவர் தற்போது கட்டுரை வடிவிலான ஆவணப்பதிவை இந்நூல் மூலமாக உருவாக்கியிருக்கிறார்.
இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர், இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மீண்டும் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையைக் கைப்பற்ற விடுதலைப் புலிகளும், பதிலுக்கு ஒட்டு மொத்தமாக யாழ்ப்பாணத்தையே தங்கள் வசம் கொண்டு வர ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இடையே லைடன் தீவு, மண்டைதீவு ஆகிய பகுதிகளில் வசித்த தமிழர்கள் சிக்கிக் கொண்டனர்.
வழியில் இருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதிலும் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்ட ராணுவத்தினர், 70-க்கும் மேற்பட்டவர்களை ஈவிரக்கமின்றிக் கொன்று புதைத்தனர். விடுவிக்கப்பட்ட சிலரது வாக்கு மூலங்களும், இதழ்களில் அரிதாக வெளிவந்த தகவல்களும் இந்நூலில் உள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அறிய விரும்புவோர் மட்டுமல்லாது, மனித உரிமை பாதுகாப்பில் ஈடுபாடு கொண்ட அனைவருமே படிக்க வேண்டிய நூல் இது.
1990 (லைடன் தீவு-மண்டை தீவு படுகொலைகளும் புதைகுழிகளும்)
ஷோபாசக்தி
கருப்புப் பிரதிகள்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 94442 72500
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in