இலக்கியம்

மகளைக் காப்பாற்று... மகளைப் படிக்கவை!

இராம.சீனுவாசன்

‘மகளைக் காப்பாற்று... மகளைப் படிக்கவை’ என்று மத்திய அரசின் திட்டம் உள்ளது. ஆனால், பெரும்பாலான இந்தியர்களோ ‘மகனைக் காப்பாற்று... மகனைப் படிக்கவை’ என்றுதான் இப்போதும் இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மேற்கொண்ட கணக்கின்படி, 2014 வரை 6.3 கோடி பெண்கள் இந்தயாவில் பிறக்கவே இல்லை. இது என்ன புதுக் கணக்கு என்கிறீர்களா? மகனை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் இருந்ததால் இவ்வளவு பெண்கள் பிறக்காமலே போயிருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்திய அரசின் பொருளாதார அறிக்கை 2017-18-ல் ஒரு விரிவான கட்டுரை இருக்கிறது. இயற்கையாக ஆண், பெண் இருபாலாரும் 1.05:1 என்ற விகிதத்தில் பிறப்பார்கள், அதாவது 1050 ஆண்கள் பிறக்கும்போது 1000 பெண்கள் பிறப்பார்கள்.

இந்தியாவில் முதல் குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் தம்பதியின் ஆண், பெண் விகிதாச்சாரம் 1.82:1 என்று இருக்கிறது. முதலில் ஆண் பிறந்த பிறகு பெண் குழந்தை பெற்றெடுக்க வேண்டாம் என்ற முடிவை பல தம்பதிகள் எடுக்கிறார்கள். இதுவும் பெண்களின் விகிதாச்சாரம் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம். ஒரு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகள் இன்னும் இந்தியாவில் உள்ளனர்.

குடும்பங்களில் ஆண்களைவிட அதிக பெண்கள் இருந்தாலும் பெண்களுக்கான பொருளாதார ஒதுக்கீடு குறைவாகவே இருக்கிறது. இப்படி இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி பல சுவாரசியமான புள்ளிவிவரங்கள், ஆராய்ச்சி முடிவுகளைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை. நீங்களும் வாசியுங்களேன்.

Government of India,

Economic Survey, 2017-18

http://mofapp.nic.in:8080/economicsurvey/

- இராம சீனுவாசன், பொருளியல் நிபுணர்.

தொடர்புக்கு: seenu242@gmail.com

SCROLL FOR NEXT