சென்னை ‘இந்து தமிழ் திசை’ தலைமை அலுவலகத்தில், ‘என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘இந்து தமிழ் திசை’ தலைமைச் செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் நூலை வெளியிட, சிறார்கள் தமிஷ், தோஷிகா, கபீனேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் நூலாசிரியர் மமதி சாரி. | படம்: ம.பிரபு | 
இலக்கியம்

எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ நூல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘இந்து தமிழ் திசை’ தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ‘இந்து தமிழ் திசை’ தலைமைச் செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் தலைமை வகித்து நூலை வெளியிட, சிறார்கள் தமிஷ், தோஷிகா, கபீனேஷ் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்கர் வி.சுப்ரமணியம் பேசும்போது, ‘பல்வேறு தளங்களில் திறன் பெற்றவராக விளங்குகிறார் மமதி சாரி. சிறார் இலக்கியத்தையும் அண்மைக்காலமாக தன் எழுத்து மற்றும் ஓவிய ஆற்றலால் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளார். எனக்கு பிடித்த சிறார்கதை இரும்புக் கை மாயாவி. அதன்பின், அம்புலிமாமா, சந்த மாமா! தற்போது குழந்தைகளை திசை திருப்ப செல்போனை பயன்படுத்துகின்றனர். அதுவே பின்னாளில் தலைவலியாக மாறுகிறது.

இந்த சூழலில், புத்தகத்தை குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக ‘இந்து தமிழ் திசை’ பல்வேறு முனைப்பை எடுத்து வருகிறது. அண்மையில் 1 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினோம். இதேபோல் ஒருமித்த எண்ணம் உடைய மமதியுடன் கைகோர்த்து செயல்படுவதில் ‘இந்து தமிழ் திசை’ பெருமைப்படுகிறது’என்றார்.

‘இந்து தமிழ் திசை’ உதவி செய்தி ஆசிரியர் ஆர்.சி.ஜெயந்தன் பேசும்போது, ‘கதை கேட்கும்போது கற்பனை விரிகிறது. குறிப்பாக எழுத்து வழியே சிறார் இலக்கியத்தை வாசிக்கும்போது புதிய பரிமாணம் பெறுகிறோம். படைப்பாற்றலுக்கு கதைகளே கை கொடுக்கின்றன.

காட்சி வழியான சிறார் கதையில் கற்பனைக்கு இடமில்லை. ஆனால் எழுத்தின் வழியே படிக்கும்போது ஓவியத்தை தாண்டி கூட கற்பனை செய்யமுடிகிறது. தமிழ் கலாச்சாரத்தில் இருந்து எழுத்தாளர் மமதி கதாபாத்திரத்தை உருவாக்குகிறார்’ என்றார். நூலாசிரியர் மமதி சாரி ஏற்புரையாற்றும்போது, ‘என்கோ என்ற சின்ன பையனும், பறல் என்னும் ஆட்டுக்குட்டியும் முக்கிய கதாபாத்திரமாக இந்நூலில் இடம் பிடிக்கின்றன.

இந்த புத்தகத்தில் அவர்கள் கடல் கொள்ளையர்களாக மாறுகின்றனர். சின்னச் சின்ன தமிழ் சொற்கள் அதற்கான விளக்கங்களுடன் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். தொடர்ந்து அடுத்த புத்தகத்தில் துப்பறிவாளராகி பட்டாம்பூச்சிக்கு இவர்கள் உதவ போகிறார்கள்.

வரும் ஞாயிறன்று (நாளை) காலை 10 மணிக்கு எனது புத்தக கதாபாத்திரங்கள் குறித்த 2 மணி நேரம் அமர்வை சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்துள்ளோம்’என்றார். நிகழ்வில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக துணை இயக்குநர் முனைவர் பா.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக முதுநிலை மேலாளர் எஸ்.இன்பராஜ், புத்தகங்கள் பிரிவு கிரியேட்டிவ் ஹெட் மு.ராம்குமார் ஆகியோர் புத்தகம் குறித்து பேசினர்.

புத்தகம் எங்கு கிடைக்கும்? - ‘என்கோ & பறல் - கடற் கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ நூல் மொத்தம் 36 பக்கங்களைக் கொண்டது. நூலின் விலை ரூ.170. இதை store.hindutamil.in/publications என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவுசெய்து வாங்கலாம். அஞ்சல்மற்றும் கூரியர் மூலம் பெற 'KSL MEDIALIMITED' என்ற பெயரில் டிடி அல்லது மணியார்டர் அல்லது காசோலையை ‘இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை,சென்னை 600 002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 7401296562, 7401329402 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

SCROLL FOR NEXT