இலக்கியம்

கலையின் குரல் என்பது காலத்தின் குரலே!

பாவண்ணன்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் மாற்று நாடக இயக்கத்தின் ஆறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நான்கு நாட்களில் எட்டு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு நாள் மாலையிலும் இரு நாடகங்கள். மிகச் சிறப்பான முயற்சி. ‘சுபமங்களா’ கோமல் சுவாமிநாதன் முயற்சியால் தொண்ணூறுகளில் நடைபெற்ற நாடக விழாக்களை நினைவூட்டும் வகையில் நாடகங்கள் நடந்தன. இளம் நடிகர்கள், நடிகையர்கள் மேடையில் உத்வேகத்துடன் நடிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாடகம் நிகழும்போதும் பார்வையாளர்களால் அரங்கு நிரம்பியிருந்தது. அனைத்து பொறுப்புகளையும் ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்து சுழன்றுகொண்டிருந்தார் நடிகரும் இயக்குநரும் கல்லூரி ஆசிரியருமான பார்த்திப ராஜா.

எட்டு நாடகங்களில் ‘விசாரணை’ மிக முக்கியமான நாடகம். பிரீஸ்ட்லியின் ஆங்கில நாடகத்தினுடைய தமிழ் வடிவம். தமிழில் மொழிபெயர்த்தவர் பரீக்‌ஷா ஞாநி.

ஓர் இளம்பெண்ணின் தற்கொலை தொடர்பாக ஒரு தொழிலதிபரின் வீட்டில் நிகழும் விசாரணையோடு தொடங்குகிறது நாடகம். அந்தத் தொழிலதிபருடைய ஆயத்த ஆடை ஆலையில் பணிபுரிந்துவந்தவள் அவள். ஆனால், சம்பள உயர்வு கேட்டதற்காக சில மாதங்கள் முன்பாகவே பணியிலிருந்து விலக்கப்பட்டவள். அவள் வேறொரு கடையில் பணிப்பெண்ணாக வேலைபார்த்துவந்தபோது, துணி வாங்கச் சென்ற தொழிலதிபரின் பெண்ணின் ஆணையால் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிடுகிறாள். அவள் ஆதரவின்றி இருக்கும்போது அவளுக்கு உதவிபுரிந்து, அவளைத் தன்னுடைய விருப்பப் பெண்ணாக சிறிது காலம் வைத்திருப்பவன் தொழிலதிபரின் மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞன். ஆதரவில்லாமல் இருந்த அப்பெண்ணோடு குடும்பம் நடத்தி கருவுற்ற நிலையில் கைவிட்டு ஓடிவருபவன் தொழிலதிபரின் மகன். நிறைமாத கர்ப்பிணியாக ஓர் அறக்கட்டளை அலுவலகத்துக்கு உதவி கேட்டுச் சென்றபோது, அங்கு பொறுப்பிலிருக்கும் தொழிலதிபரின் மனைவியால் விரட்டியடிக்கப்படுகிறாள். இதற்குப் பிறகே அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். எங்கோ நிகழ்ந்த ஒரு மரணத்துடன் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தப் புலன்விசாரணையே நாடகத்தில் இடம்பெறும் காட்சிகள்.

விருந்துகூட விவாதம்போன்ற தோற்றத்தோடு தொடங்கும் நாடகத்தில் காவல் அதிகாரியின் வருகை நிகழும் கணத்திலிருந்து நுட்பமாக ஒரு மாற்றம் நிகழ்கிறது. அக்கணம் முதல் நிகழும் ஒவ்வொரு உரையாடலும் தனிப்பட்ட இருவருடைய உரையாடலாக இல்லாமல் முதலாளிய சமூகத்துக்கும் பொது அறம் கோரும் புது சமூகத்துக்குமான உரையாடலாகவே நிகழ்கிறது. நாடகத்தின் மாபெரும் சாதனை இது. ‘மனசாட்சிக்கு நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்’ என்னும் குரலுக்கு அழுத்தம் கொடுக்கிறது நாடகம். அன்று முதலாளிய சமூகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட அந்தக் குரல் இன்று அனைவரையும் நோக்கி ஒலிக்கிறது. கலையின் குரல் என்பது காலத்தின் குரலே. அந்தக் குரலோசை சிற்சில சூழல்கள் காரணமாக அடங்கி ஒலிக்கக்கூடும். ஆனால், ஒருபோதும் மங்கிப்போவதில்லை. இந்த உலகில் எது மாறினாலும் மாற்றமடையாத ஒரு கேள்வியோடு அது ஒலித்தபடியே இருக்கிறது.

ரஷ்யாவில் 1945-ல் முதன்முதலாக அரங்கேற்றப்பட்ட நாடகம் ஏறத்தாழ 73 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டை வந்தடைந்திருக்கிறது. முக்கால் நூற்றாண்டு காலத்தில் உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அன்றிருந்த ரஷ்யா இன்றில்லை. பல தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த நாடகம் அன்று முன்வைத்த கேள்விகள் இன்னும் உயிருடன் உள்ளன. இதுவே கலையின் வெற்றி!

- பாவண்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: paavannan@hotmail.com

SCROLL FOR NEXT