தமிழ் உலகில் ‘மணிக்கொடி காலம்’போல கோவைக்கு ‘வானம்பாடி காலம்’ முக்கியமானது. 1970-களின் தொடக்கத்தில் இலக்கியவாதிகள் தமிழ், பக்தி, காந்தியம், காதல் என பாடிக்கொண்டிருந்த நேரத்தில் இடதுசாரி தாக்கம் மிகுந்த இளைஞர்களின் வடிகாலாகக் கோவை உப்பிலிபாளையத்தில் முல்லை ஆதவன் தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தினோம். அதில் கவிஞர்களே பெரும்பகுதி இருந்தனர். ‘மானுடம் பாடும் வானம்பாடி’ என்ற தலைப்பில் ஒரு இயக்கம் காண அந்த கூட்டத்தில் முடிவெடுத்து அதுவே பிறகு வானம்பாடி இயக்கமாக உருவெடுத்தது.
அப்போது இதைப் பற்றி கூட்டங்கள், விவாதங்கள் நடத்த நேஷனல் டுடோரியல் காலேஜ் தனது வகுப்பறையைத் தந்தது. அதுவே பின்னாளில் வானம்பாடி இலக்கிய இதழ் உருவாகக் காரணமாக அமைந்தது. அப்போது வாசிப்பு பெரும் சுகம். இலக்கியத்தைத் தேடித்தேடி வாசித்ததுபோலவே திக, திமுக, இடதுசாரிகள் சார்ந்த நூல்களையும் ஆழமாக வாசித்து நேசித்தனர்.
தொலைக்காட்சி, செல்போன் என கேளிக்கை சமாச்சாரங்கள் வந்த பிறகு இலக்கிய வாசிப்பு என்பது அருகிவிட்டது. இன்றைக்கு புத்தகங்கள் வாசிக்க வைக்கவே தனியாக சிரத்தை எடுக்க வேண்டியிருப்பது துரதிருஷ்டவசமானதுதான். இப்படியான அவநம்பிக்கைகளைப் பொய்ப்பிக்கும் விதமாகவே புத்தகக் காட்சிகள் இருக்கின்றன! வாசகர்களோடு உரையாடும்போதெல்லாம் வானம்பாடி காலத்துக்குப் பயணித்துவிடுகிறேன்!
- சி.ஆர்.ரவீந்திரன்,
‘ஈரம் கசிந்த நிலம்’, ‘மணியபேரா’ உள்ளிட்ட கோவை மண் மணக்கும் பல்வேறு நாவல்களை எழுதியவர்.