சென்ற வாரத்தில் ‘இந்து தமிழ்’ எழுதியிருந்த ‘சிறுபத்திரிகைகள் களம் மாற வேண்டும்!’ தலையங்கத்தை வாசித்தேன். சமகாலச் சிறுபத்திரிகைகளையும் சிறிய பத்திரிகைகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது இந்தத் தலையங்கம் என்பது அது கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை.
சிறுபத்திரிகை என்பது இலக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்க 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20-ம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, மேற்கில் செயல்பட்ட இதழியல் வகைமை. மேற்கில் பல மொழிகளில், நாடுகளில் வேறுவேறு காலங்களில் உருவாகி இலக்கியத்தின், கலைகளின் புதிய முயற்சிகளுக்கு வழிகோலியுள்ளது.
எல்லாப் பண்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் இயக்கமாக தாக்கம் செலுத்தி சில பத்தாண்டுகளில் அந்த இயக்கம் தேய்ந்துள்ளது, தனி இதழ்கள் தொடர்ந்துவருகின்றன என்றபோதும்! நான் அறிந்தவரை உலகின் எந்த மொழியிலும் ஓரிரு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கமாக அது தழைத்ததாக இல்லை.
சிற்றிதழ், சிறுபத்திரிகை, மாற்று இதழ் இவற்றுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் மூன்றையும் ஒன்றாக இந்தத் தலையங்கம் பார்க்க முற்படுகிறது. இதுவும் சரியல்ல. தமிழில் 'மணிக்கொடி' சிற்றிதழ் என்றால், ‘எழுத்து’ சிறுபத்திரிகை. ‘நிறப்பிரிகை’ மாற்று இதழ் எனலாம். தமிழ்போல பெரும்பாலான இந்திய மொழிகளில் 1950-60-களில் சிற்றிதழ் ஒரு இயக்கமாக இருந்து பின்னர் தேய்ந்துவிட்டதைக் காணலாம்.
1990-களில் பொருளாதார தாராளவாதம், ஊடகங்களின் பெரும் விரிவாக்கம் நிகழ்ந்த காலகட்டத்தில் பல மொழிகளில் மாற்று இதழ்கள் அதிகம் உருவாயின. உள் வட்டத்தில் தாக்கம் செலுத்தி அதன் வழி தாக்கம் வெளிவட்டங்களுக்குப் பரவும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு சிறுபத்திரிகைகள். மாணவர்கள், வாசகர்கள், ஊடகர்கள் எனப் பலதரப்பட்டோரிடம் வெளிவட்டத்தில் தாக்கம் செலுத்தியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எண்ணுபவை மாற்று இதழ்கள்.
இரண்டுமே அவசியம்தான். அவை உரிய தாக்கத்தையும் உண்டாக்கியிருக்கின்றன. வெகுஜன இதழ்களில் இன்றுள்ள எழுத்தாளர்கள், வெளியாகும் கருத்துகள், படைப்புகளில் ‘சுபமங்களா’, ‘காலச்சுவடு’, ‘நிறப்பிரிகை’ போன்ற இதழ்கள் உண்டாக்கியிருக்கும் தாக்கத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால், தமிழின் 200 ஆண்டு கால இதழியல் வரலாற்றில் முதல் முதலாக இப்போதுதான் ஒரு மாற்று இதழ் – ‘காலச்சுவடு’ - 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாதம் தவறாமல் வெளிவருகிறது. இதுதான் இங்குள்ள சூழலாகவும் இருக்கிறது. ‘காலச்சுவடு’ இதழையும் அதற்கு ஒரு தலைமுறைக்குப் பிறகு வெளிவந்த ‘உயிர்மை’ இதழையும் இந்தத் தலையங்கம் இணைத்து ஒப்பிடுவது சரியல்ல. உண்மையில் 1990-களில் பேசப்பட வேண்டிய இதழ்கள் ‘சுபமங்களா’, ‘நிறப்பிரிகை’ போன்றன.
எல்லாச் சாதனைகளையும் கடந்த காலத்தில் வைத்து எல்லாச் சரிவுகளையும் நிகழ்காலத்தில் வைத்துப் பேசும் அணுகுமுறை ஆக்கபூர்வமானது அல்ல!
- கண்ணன், ஆசிரியர்-பதிப்பாளர்,
‘காலச்சுவடு’.
தொடர்புக்கு: kannan31@gmail.com