எழுத்தாளர் தம்பதியான சக்திதாசன் சுப்பிரமணியனும் ஜலஜா சக்திதாசனும் கம்ப ராமாயணத்தின் ஆறு காண்டங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களோடும் எளிய உரையோடும் தொகுத்தளித்த ராமாயணக் கதைச் சுருக்கத்தின் மறுபதிப்பு. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு ராமாயணக் கதைகள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்கள் வடிக்கப்பட்ட கோயில்கள், ராமாயணக் கதையைச் சொல்லும் சங்க இலக்கியங்கள், கம்பரின் காலமும் சூழ்நிலையும், அவர் படைத்த சமதர்ம சமுதாயம் என்று குறிப்பிடத்தக்க ஆய்வுரையாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை.
புகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்
சக்திதாசன் சுப்பிரமணியன்
நர்மதா பதிப்பகம், சென்னை-600 017
விலை: ரூ. 400. 044 2433 4397
பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி செடி ரகங்கள், பட்டுப்புழுவான பாம்பிக்ஸ் மோரியின் உடலமைப்பு, பட்டுப்புழு வளர்ப்பைப் பாதிக்கும் நோய்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், பட்டுக்கூட்டினை சந்தைப்படுத்துதல் என்று பட்டு வளர்ப்பின் சகல விஷயங்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் தஞ்சை சரபோஜி கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் மாரியப்பன் எழுதியுள்ள நூல். விலங்கியல் படிக்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக மட்டுமின்றி பட்டுப்புழு வளர்க்க விரும்புபவர்களுக்குக் கையேடாகவும் விளங்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் பேராசிரியர் மாரியப்பன்.
பட்டுப்புழு வளர்ப்பு
பி.மாரியப்பன்
இயல், தஞ்சாவூர்- 613 001
விலை: ரூ. 200. 9940558934
“ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி!” என மகாகவி பாரதியால் கொண்டாடப்பட்ட ரஷ்யப் புரட்சியை வழிநடத்தியவர் மார்க்சிய மாமேதை லெனின். 1917-ல் ஜார் மன்னனின் ஆட்சி வீழ்ந்து, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வென்றது. சோவியத் யூனியன் பொதுவுடைமை தேசமாக மலர்ந்த வரலாற்றையும் லெனின் பற்றியும் எழுதப்பட்ட குறுங்கவிதை நூலிது என்றாலும் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளவும் படித்து உத்வேகம் பெறவும் உதவும் நீள்கவிதையாக உள்ளது.
தவாரிஷ் லெனின்
ஜோசப் ராஜா
விலை: ரூ.25
தமிழ் அலை, சென்னை-600 086
044-24340200
தி.தா.நாராயணனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. நூலிலுள்ள 14 சிறுகதைகளில் பல கதைகள் சமூக அநீதிகளுக்கெதிரான சத்திய ஆவேசமிக்க குரலை ஒலிக்கின்றன. நாராயணனின் விவரணையும் கதாபாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியும் வாசிப்புக்கு விறுவிறுப்பை ஊட்டுகின்றன. ஆட்டுக்காரன், அங்குசம், மீன்குழம்பு ஆகிய கதைகள் வெகுநேரம் நம் மனதில் தங்கி யோசிக்க வைப்பதில் வெற்றி பெறுகின்றன.
அம்மணம்
செய்யாறு தி.தா.நாராயணன்
விலை:ரூ.175/
சந்தியா பதிப்பகம், சென்னை-600 083
044-24896979
தொகுப்பு: மு.முருகேஷ்