லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்: விலை: ரூ.200 - கவிதை, சிறுகதை, வழிபாடு, மாற்று மருத்துவம், புராணம், பக்தி, சினிமா, ஹாஸ்யம் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் 40 எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அட்டையில் பக்தி மணம் கமழக் காட்சிதரும் வள்ளி தேவசேனை சமேத முருகன், ஆன்மிகப் பக்கங்களில் மட்டுமல்லாமல் கவிதை, புராணம், மூலிகை மருத்துவம் எனப் பல கட்டுரைகளிலும் வியாபித்து இந்த மலரை ‘முருகன் சிறப்பு’ மலராக மாற்றியிருக்கிறார். 21 எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில் அமைந்திருக்கின்றன. முழுப் பக்க வண்ணத்தாளில் இடம்பெற்றிருக்கும் அயோத்தி ராமரின் தரிசனம் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது.
அமுதசுரபி தீபாவளி மலர்: விலை: ரூ.200 - இலக்கியத்தைத் தற்கால இலக்கியம், பண்டைய இலக்கியம் என இரண்டாகப் பிரித்து அவற்றில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வற்றை வெளியிட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் சிவசங்கரியின் நேர்காணல், பரதநாட்டியத்தின் ஒப்பில்லாக் கலைஞர் பாலசரஸ்வதியைப் பற்றிய கட்டுரை போன்றவற்றோடு தமிழ் வளர்க்கும் அமைப்புகள் பற்றிய கட்டுரைகளும் தத்துவ – அரசியல் கட்டுரைகளும் நேர்த்தியாக இருக்கின்றன. ஓவியர் மணியம் செல்வனின் கைவண்ணத்தில் வெவ்வேறு கோலங்களில் மனம் கவர்கிறார் கண்ணன். மருத்துவம், அறிவியல், வாழ்வியல் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் சுவாரசியமாக இருக்கின்றன.
கலைமகள் தீபாவளி மலர்: விலை: ரூ.200 - சிருங்கேரி சங்கராச்சாரியாரின் அருளுரையோடு தொடங்குகிறது மலர். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண் டைச் சிறப்பிக்கும் வகையில் அவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரை சிந்தையை நிறைக்கிறது. இந்திரா சௌந்தரராஜன், ராஜேஷ்குமார், மாலன் உள்ளிட்டவர்களின் சிறுகதைகள், ‘இஸ்ரோ’வின் மேனாள் விஞ்ஞானி ஜி.கிருஷ்ணனின் அறிவியல் கட்டுரை, தன் தந்தை சித்ராலயா கோபுவைப் பற்றிய காலச்சக்கரம் நரசிம்மாவின் கட்டுரை, பாரதியாரைப் பற்றிய இசைக்கவி ரமணனின் கட்டுரை, அட்டைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பற்றிய வித்யா சுப்பிரமணியத்தின் ஆன்மிகக் கட்டுரை ஆகியவற்றோடு மருத்துவம், கவிதை, இலக்கியம், பயணக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.