காலந்தோறும் பெண்கள் கடந்துவந்த பாதையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்திருக்கும் நூல் இது. உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், தொழிற்புரட்சி, காலனியாதிக்கம் போன்றவை நிலவியபோது, பெண்ணடிமைத்தனமும் உழைப்புச் சுரண்டலும் எப்படியெல்லாம் செயல்படுத்தப்பட்டன, அவற்றிலிருந்து வெளியேற மார்க்சிய அறிஞர்கள் காட்டிய பாதை எவ்வளவு விசாலமானது என்பதை இந்நூல் பேசுகிறது. பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பதில் சோஷலிச இயக்கங்கள் ஆற்றிய பங்கைக் குறிப்பிடுவதோடு, இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களின் முன்னெடுப்பையும் இந்நூல் பதிவுசெய்திருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பெண்களின் வரலாற்றில் தொடங்கிச் சமகாலத்தில் முடித்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றைத் தெரிந்துகொண்டால்தான் சமகாலச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் புரியும் என்பதை உணர்த்தியிருக்கும் ஆசிரியர் நர்மதா தேவி, பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறார். - பிருந்தா
பெண் அன்றும் இன்றும்
நர்மதா தேவி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.520
தொடர்புக்கு:
044-24332924
ஓர் உண்மைக் காதல்: ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காதல் கதையைப் பேசுகிறது, பழ.ரவீந்திரன் எழுதியுள்ள ‘பாண்டிய நாட்டு இளம் சிட்டுகள்’ நாவல். கிராமத்திலும் நகரத்திலும் என இரண்டுவிதமான காதல் கதைகள் இந்த நாவலில் எடுத்தாளப்பட்டுள்ளன. இருவேறு முடிவுகளைச் சொல்லும் இந்தக் காதல் கதைகளிலிருந்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கான கருத்துகள் நாவலில் நயம்பட உள்ளன. சமூகத்துக்குத் தேவையான நல்ல அம்சங்களையும் கதையோடு சேர்த்து நாவலாசிரியர் குழைத்துக் கொடுத்திருக்கிறார். - கார்த்தி
பாண்டிய நாட்டு இளம் சிட்டுகள்
பழ.ரவீந்திரன்
ஆதிரா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94455 80577
நம் வெளியீடு: மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு - மார்ட்டின் லூதர் கிங்கின் ‘கனவு’ மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும். “என் கனவில் வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டுத் தன் நூற்றாண்டு காலத் தவறுகளுக்கு மன்னிப்புக் கோரும். கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்காவை அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் தேவாலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருப்பார்” எனச் சொல்லியிருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். அவரது மாபெரும் கனவு பற்றிப் பேசுகிறது இந்த நூல்.
நான் ஒரு கனவு காண்கிறேன்!
மருதன்
விலை:ரூ.130
தொடர்புக்கு: 7401329402 / 7845875723
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications